கட்சி தாவல் செய்தியை முற்றாக மறுக்கிறார் இம்ரான் மஹ்ரூப்
Sunday, December 14, 20140 comments
ஆட்சி மாற்றத்திற்கான சிறந்த சூழ்நிலையொன்று நாட்டில் உருவாகியுள்ள இவ்வேளையில் ஆளுங்கட்சிக்கு தாவுவது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
“இம்ரான் மஹ்ரூபை அரசின் பக்கம் இழுக்க வலைவீச்சு” என்ற தலைப்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கம் இப்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைப் போன்று உள்ளது. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஐ.தே.கட்சியில் பலரோடு பேரப் பேச்சுக்களை அரசு ஆரம்பித்துள்ளது. என்னோடும் பேசப் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இக்கப்பலில் ஏறுபவர்களும் மூழ்க வேண்டிய நிலைதான் உள்ளது. இது அரசியல் தற்கொலை போன்றது.
எனக்கு அரசியல் முகவரியைப் பெற்றுத் தந்தது ஐக்கிய தேசியக்கட்சி தான். 2010இல் அரசியலில் பிரவேசித்த என்னை மிகக் குறுகிய காலத்தில் 2012இல் மக்கள் ஒரு மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்துள்ளார்கள். எனவே, என்னோடு மிகவும் இரக்கமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை கைவிட்டு அற்ப சுக போகத்திற்காக கட்சி தாவ நான் தயாரில்லை.
என்னுடைய பாட்டன் முன்னாள் கிண்ணியா கிராமசபைத் தலைவர் மர்ஹூம் எகுத்தார் ஹாஜியார், எனது பெரிய தந்தை முன்னாள் எம்.பி மர்ஹூம் எம்.ஈ.எச்.முகம்மது அலி, எனது தந்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் என சிறந்த அரசியல் தலைமுறைகளைக் கொண்டது எனது குடும்பம். எனவே. குடும்ப கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.
நான் வயதில் மிகவும் இளையவனாக இருந்த போதிலும் கட்சியின் கிழக்கு மாகாணத்தின் ஒரேயொரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் எனக்குரிய கௌரவத்தை ஐக்கிய தேசியக் கட்சி தந்திருக்கின்றது. திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் பதவியை எனக்குத் தந்ததன் மூலம் அரசியல் ரீதியாக அதிக நன்மைகளைப் பெறக் கூடிய வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூதூர்த்தொகுதி எனது தந்தையால் வளர்க்கப்பட்ட தொகுதி. எனவே, இங்கு எனது தந்தையை நேசித்த அனைவரும் என்னை நேசிக்கிறார்கள். அந்த வகையில் மூதூர்த்தொகுதியில் எனக்கு நிலையான வாக்கு வங்கி உண்டு. திருகோணமலைத் தொகுதி எனக்கு வழங்கப்பட்டதன் மூலம் மேலதிக ஆதரவாளர்களை என்னால் திரட்ட முடிந்துள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளக்கூடிய அளவுக்கு ஆதரவாளர்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை எனக்கு கட்சி தந்திருக்கிறது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்யப்போவதில்லை. எனவே, மக்கள் எவ்வகையிலும் குழப்பமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment