அளுத்கம விவகாரமும் அம்பலமான ஜனாதிபதியின் மறுமுகமும்

Tuesday, July 1, 20140 comments


தீபச்செல்வன்

சில உலக நாடுகள் ராஜபக்சேவை தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றன. அமைதி, சமதானம் நல்லிணக்கம் எபவற்றுக்காக ராஜபக்சவுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. சில நாடுகள் ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி என்று மிரட்டிக் கொண்டிருக்கின்றன. பொலிவியாவுக்குச் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ச அமைதி, சமதானம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக அதியுயர் விருது ஒன்றைப் பெற்றுக் கொண்டு இன வன்செயல்களால் கலவரமாகக் காணப்பட்ட நாட்டிற்குத் திரும்பினார். இந்த வன் செயல்கள் எதற்காக நிகழ்த்தப்படுகின்றன? யாரால் நிகழ்த்தப்படுகின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாக எழுகின்ற கேள்விகளாகும்.


இலங்கைத் தீவின் இரத்தக் கறை படிந்த மாதங்கள்; ஜீலை மற்றும் மே மாதம். தமிழ் இனத்திற்கு எதிரான இனப்படுகொலை கலவரங்களும் படுகொலை யுத்தமும் நடந்த மாதங்கள் இவை. தெற்கில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக இன வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமே ஜீலைப் படுகொலை. ஈழத் தமிழர்களும் மலையக் தமிழர்களும் அந்த நாளை என்றுமே மறக்கவில்லை. தலைமுறைகள் கடந்தும் மறக்க முடியாத வடுவாக அந்த நாட்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஜீலைப் படுகொலை நடந்து இப்போது முப்பத்தொரு வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இன்னுமொரு ஜீலைப் படுகொலையை நிகழ்த்த தயராக இருக்கிறோம் என்பதையும் எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் இனப்படுகொலையை செய்வோம் என்பதையும் சிங்களப் பேரினவாதிகள் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரத்தின் மூலம் நினைவுபடுத்துகின்றனர்.


தென்னிலங்கையில் அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்த இனவொடுக்குமுறைத் தாக்குதல்கள் மிகவும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டவை. இந்த இன ஒடுக்குமுறைத் தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரும் சக்தியாக இருப்பது இலங்கை அரசாங்கமே. சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையை மேற்கொள்ள அடிப்படைவாத குழுவாக பொதுபலசேனா உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு உருவாகிய நாட்களிலிருந்து இன்றுவரையில் அது சிறுபான்மை இன மக்களை கடுமையாக எச்சரித்தது. மன்னார் ஆயர் யோசப்பு ராயப்புவை எச்சரித்தார்கள். இது சிங்கள பௌத்த நாடு இங்கு வேறு இனத்தவர்களுக்கு இடமில்லை என்று சொன்னார்கள்.
சிங்களப் பேரினவாத அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க விரும்பிய பல விடங்களை பொதுபலசேனா அமைப்பின் மூலம்தான் வெளியிட்டது. சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடூர முகங்களின் ஒன்றுதான் பொதுபலசேனா. பொதுபலசோனவின் கலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டபோதே முஸ்லீம் மக்களை சிங்களப் பேரினவாதிகள் இலக்கு வைத்துவிட்டார்கள் என்று உணர முடிந்தது. அந்த தொடர்ந்து வெளிப்படையாக எச்சரித்து வந்தது. அதன் வெளிப்பாடுதான் பேருவளை மற்றும் அளுத்மக வன்செயல்கள். இந்த கலவரத்தில் நான்கு உயிர்கள் பலியெடுக்கப்பட்டத்துடன் பலகோடிக் கணக்கான சொத்துக்கள் எரித்து அடித்து நாசக்கப்பட்டன. முஸ்லீம் மக்களின் பெருளாதாரத்தை சிதைக்கவே அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.


முஸ்லீம் மக்கள் மீதான இனக்கலவரம் தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ளபோதும் இன்னமும் நிறுத்தப்படவில்லை. இன்னமும் கடைகள் எரியூட்டப்படுகின்றன. பள்ளிவாசல்களோ அச்சம் மிகுந்தவையாக பதற்றத்தோடு காணப்படுகின்றன. வன்முறைகள் தெற்கில் மாத்திரம் நிகழவில்லை. இலங்கைத் தீவு முழுக்க அங்காங்கே வன்முறைச் சம்வங்களும் முஸ்லீம்களுக்கு எதிரான சிறுசிறு தாக்குதல்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒரு சிறிய சம்பவத்திற்காக முஸ்லீம்கள் ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மகிந்த ராஜபக்சே ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். முஸ்லீம் மக்களை தாக்கிய பேரினவாத செயற்பாட்டின் உச்சம் இதுவே.


ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் இழக்கப்பட்ட நான்கு உயிர்கள் மட்டும் சிறியவையல்ல. முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களும் இனப்படுகொலையும் கூட சிறிய விடயங்களே. சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் மக்களை அடக்கிய ஒடுக்குவது சிறிய விடயம் என்று சொல்வதன்மூலம் ராஜபக்சேதனது பல முகங்களை வெளிப்படுத்துகிறார். நாட்டில் அடிப்படைவாத குழுக்களுக்கு இடமில்லை என்கிறார் ராஜபக்சே. இலங்கை அரசாங்கம்தான் அடிப்படைவாத குழுவாக இருக்கிறது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதி கிடையாது என்கிறார் ராஜபக்சே. பொதுபலசேனா மக்களை தாக்கியபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்து ஒத்தாசை புரிந்தனர். இனவாத அமைப்புக்களை தடைசெய்யப்போவதாக சிங்கள அரசு கூறுகிறது. அப்படியெனில் முதலில் இலங்கை அரசையே தடைசெய்ய வேண்டும்.


ஒரு இனத்தை மற்றொரு இனம் மதிப்பததை அனுமதிக்க முடியாது என்கிறார் ராஜபக்சே. ஆனால் ஒரு இனத்தை மற்றொரு இனம் ஒடுக்கி அழிக்க்லாம் என்று பேருவளை அளுத்கம சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இலங்கை அரசாங்கம் பேருவளை அளுத்கம இன ஒடுக்குமுறைத் தாக்குதலை இனக்கலவராக சித்திரிக்க முனைகிறது. இரண்டு இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட கலவரமாக காட்டுவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதில் தொடர்பில்லை என காட்ட முனைகிறது. இனக்கலவரம் வேறு இன ஒடுக்குமுறைத் தாக்குதல்வேறு. பேருவளை அளுத்கமவில் நடைபெற்ற மிக நீண்ட நாட்களாக நன்கு திட்டமிட்டு சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட இன ஒடுக்குமுறைத் தாக்குதல்.


அங்கு சிங்கள மக்கள் கொல்லப்பட்வில்லை. சிங்கள மக்களின் சொத்துக்களுக்கு சேதம் இல்லை. இது முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களை இலக்காக கொண்டு நன்கு திட்டமிட்டப்பட்ட இன ஒடுக்குமுறை. தமழிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடந்தபோது  அதை எவ்வாறு இலங்கை அரசு அடையாளப்படுத்தியது? போர்க்குற்றங்களும் இனப் படுகொலைகளும் நிகழ்த்தப்ப்ட்ட அந்த யுத்தத்தை மனிதாபிமான யுத்தம் என்று சொல்லியது. இதைப்போல இன்று இனவாதிகளுக்கு இடையிலான கலவரம் என்பதன்மூலம் முஸ்லீம் மக்களும் இனவாதிகள் என காட்ட முற்படுகிறது சிங்கள அரசு.


பிரபாகரன் இருந்திருந்தால் எங்களில் கைவைத்திருக்க மாட்டார்கள் என ஒரு முஸ்லீம் தாய் தன்னிடம் கூறியதாக வடக்கு மாகாண உறுப்பினர் அஸ்மின் தெரிவித்திருந்தார். முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான இடைவெளி ஒன்று காணப்பட்டது. 1990ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியிருந்தனர். இந்த நடவடிக்கைக்கு தமிழ் தரப்பிலிருந்தே கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிட்டப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கம்மீது பெரும் விமர்சனமாக இந்த விவகாரம் வைக்கப்பட்டது. பின்னர் 2002ஆம் ஆண்டில் முஸ்லீம் காங்ககிரசுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் பின்னர் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. முஸ்லீம் மக்களை வெளியேற்றியமைக்காக மன்னிப்புக் கோரிய தலைவர் அவர்கள் தங்கள் தாயகத்தில் எந்த நேரத்திலும் வந்து குடியேறலாம் எனவும் சர்வதேச ஊடகங்களின் மத்தியில் தெரிவித்தார்.


இந்த நிகழ்வுநடைபெற்று பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தபோதும் யுத்தம் முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்தபோதும் இன்னமும் முஸ்லீம் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் தாயகத்திற்கு திரும்பவில்லை. தாயகம் திரும்பிய சில முஸ்லீம்களை நான் சந்தித்தேன். தங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் சொன்னார்கள். அரசாங்கம் முஸ்லீம் மக்கள் மீள்குடியேதை விரும்பவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி தனது அரசியலை மேற்கொள்ள தொடர்ந்தும் முஸ்லீம்கள் அகதிகளாக இருப்பதுவே அரசின் விருப்பம்.


பெரும் இராணுவ வெற்றியை சந்தித்து, சமாதான வெளிப்பாடுகளை காட்டிய சூழலில் நல்லெண்ணத்துடனும் முஸ்லீம்கள் மீதான இணக்கத்தை வெளிப்படுத்தவும் தலைவர் பிரபாகரன் முஸ்லீம் வெளியேற்றத்திற்காக மன்னிப்புக் கோரி முஸ்லீம்களை அழைத்திருந்தார். பிரபாகரன் - ஹக்கீம் ஒப்பந்தத்தின் பின்னர் இணக்கம் எட்டப்பட்ட அந்த விடயத்தை இன்னமும் பகைமையாக சிங்கள அரசம் முஸ்லீம் சந்தர்ப்பவாத அரசிய் தலைவர்களும் சித்தரிக்கின்றார்கள். அதை தமிழ் முஸ்லீம் உறவுகளுக்கு இடையிலான விரிசலை ஏற்படுத்தவும் தங்கள் தேர்தல் இலாபங்களைப் பெறவும் முனைகின்றனர். அந்த இணக்கத்தை கட்டியெழுப்ப முஸ்லீம் தலைமைகள் முன்வரவில்லை. மாறாக இலங்கை அரசுடன் இணக்கமான அரசியல் ஒன்றுக்குச் சென்று தமக்கான நலன்களை அவர்கள் சாதிக்கின்றனர்.


நான் மிகவும் ஆறுதல் கொள்ளுகிறேன். முஸ்லீம் மக்கள்மீதான தாக்குதல்களை கண்டித்து தமிழ்ச் சமூகம் கொந்தளித்தது. நியாயமான தார்மீகமான நீதியான அவசியமான கொந்தளிப்பு இது. இலங்கை முஸ்லீம்களுக்கும் எங்களுக்கும் இடையில் இன ரீயான தொடர்புண்டு. தமிழ் மொழிபேசும் இனம். தமிழ்த் தலைவர்கள் பலரும் இன ஒடுக்குமுறைத் தாக்குதலைக் கண்டித்தனர். தமிழர் தாயகத்தில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர். படைப்பாளிகள், கலைஞர்கள் எனப் பலரும் ஆதரவுக் குரல் எழுப்பினர். தமிழ் தரப்பிலிருந்து இவ்வாறான இன ஒடுக்குமுறைக்கு எதிரான கொந்தளிப்பும் நல்லெண்ண வெளிப்பபாடுகளும் காட்டப்படுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


தமிழ் மக்கள் எதிர்ப்பரசியலை முன்னெடுக்கும்போது முஸ்லீம் மக்கள் இணக்க அரசியலை முன்னெடுத்தார்கள். அவர்களின் இணக்க அரசியல்மீதான பேரினவாதிகளின் நல்லெண்ணத்தை அளுத்கம பேருவளையில் வெளிப்படுத்தியுள்ளனர். இது இலங்கையில் இணக்க அரசியலுக்கு உள்ள இடத்தை தெளிவாகக் காட்டுகிறது. எத்தகைய ரெசியல் வெளிப்பாடு காட்டினாலும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மை மக்களுக்கு ஒடுக்குமுறையை பரிசளிக்கவே விரும்புகிறது. இலங்கை அரசு இணக்கத்திற்கு எதிரானது என்ற வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.


முஸ்லீம் மக்கள்மீதான இன ஒடுக்குமுறைத் தாக்குதல்களின் பின்னரும் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் வெளிப்பாடுதான் முஸ்லீம் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவர்கள் செய்வது இணக்க அரசியலா அல்லது சரணாகதி அரசியலா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. இந்த இடத்தில்தான் மிகவும் முக்கியமான ஒரு உண்மையை நாங்கள் உணர வேண்டியிருக்கிறது.


முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு - இக்கட்டான காலத்திற்கு அம் மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையிலும் ஸ்ரீPலங்கா அரசை அசௌகரியப்படுத்தவில்லை என்றபடி இலங்கையின் நீதிமுகமாய் இருக்கும் ஹக்கீம் போன்றவர்கள் எப்படி ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்திற்காக குரல் கொடுப்பார்கள்? இணைந்து செயற்படுவார்கள்? அத்தகைய தலைமைக்காய் முஸ்லீம்மக்கள்மீது வஞ்சம் தீர்ப்பது தவறானது. இரு தரப்பினருக்கும் இடையிலான தவறுகள் விமர்சனங்களுக்கு அப்பால் ஒடுக்கப்படும் இனம் என்ற வகையில் ஒடுக்கப்படும் இன்னொரு இனத்திற்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் குரல் கொடுப்பதும் செயற்படுவதும் அவசியமானது.


இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியா சர்வதேச சமூகத்தின் முன்னர் நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்றார் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரௌவ் ஹக்கீம். அவரை நீதி அமைச்சராக ராஜபக்சே அமர்த்தியதே இதற்காகத்தான். இலங்கை நீதித்துறையில் முன்னோடியான நாடு என்றார் ஹக்கீம். சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அநீதி நடவடிக்கைளை செய்யும் நீதி கொல்லப்பட்ட ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரை நீதி அமைச்சராக – பொம்மையாக இருத்தி வைத்து எவரும் கேள்வி கேட்க முடியாத சூழலை உருவாக்கி தன் நடவடிக்கைளை செவ்வனச் செய்வதே ராஜபக்சேவின் நோக்கம். அதற்கு ஹக்கீம் நன்றாக அறிந்தே இணங்குகிறார்.
அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுவதாக ஹக்கீம் குறிப்பிட்டார். ஆனால் அவர் அமைச்சுப் பதவியை துறக்கவில்லை. அந்த அமைச்சுப் பதவியை விட்டு விலகினால் தன் மக்களுக்கு யாராவது பாதுகாப்பு தருவார்களா எனக் கேள்வி எழுப்பினார்? ஆனால் அமைச்சுப் பதவியில் இருந்தும் தன் மக்களை பாதுகாக்க எந்த உத்தரவாதமும் இருக்கிறதா என அவர் சொல்லவில்லை. ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தின் முன்னர் நிறுத்துவதை முஸ்லீம் காங்கிஸ் அனுமதிக்காது என்று கூறிய ஹக்கீம் அளுத்கம பேருவளை சம்பவங்களுக்காக சர்வதேசத்தின் முன்னர் செல்லுவேன் என்று கூறுகிறார்.


முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிரான நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து சர்வதேச விவாரணையை நிராகரித்துவிட்டு அளுத்கம பேருவளை இன வன் செயல்களுக்காக நீங்கள் சர்வதேசத்தை நாடுவது என்ன நியாயம் என்று ஹக்கீமிடம் கேட்கப்பட்ட போது அது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். இது இப்போது நடந்த சம்பவம் என்று கூறுகிறார். முள்ளிவாய்க்காலுக்கு உள்ளக நம்பகமான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் தான் வலியுறுத்தியதாக சொல்கிறார். சர்வதேசம் தனக்காக அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காவே முள்ளிவாய்க்காலை கையளுகிறது என்கிறார். இங்கு அளுத்கம பேருவளை சம்பவங்களுக்கு நீங்கள் ஏன் நம்பகமான உள்ளக விசாரணையை கோரால் சர்வதேசம் செல்லுவேன் என்றீர்கள்? சர்வதேசம் தன் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்படும் என்றால் நீங்கள் ஏன் சர்வதேசம் செல்வேன் என்கிறீர்கள் எனவும் முன்னுக்குப் பின் முரணான கேள்விகள் எழுகின்றன.


ஈழத் தமிழ்மக்களுக்கு எதிராக மிகப் பெரும் இனப்படுகொலையை போர்க்குற்றத்தை செய்த இலங்கை அரசில் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவரால் எப்படி நீதியோடும் நேர்மையோடும் பதில் அளிக்க முடியும்? இதனால்தான் தமிழ் இனத்தை அழித்த தமிழ் இனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்த ராஜபக்சேவை காப்பாற்ற வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருக்கிறார். இலங்கை அரசு வேறு சிங்களப் பேரினவாதம் வேறு என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.


தங்கள் இருப்பிற்காகவும் நலனுக்காகவும் சொந்த இனத்திற்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு நீதி கிடைக்கும் என்று உறுதியாக நம்புவர்கள் எப்படி தமிழ் இனத்திற்காக குரல் கொடுப்பார்கள்? முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை. ஓடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் முஸ்லீம் சமூகம் இணைந்து தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஏனெனில் சிங்களப் பேரினவாதம் என்பது ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்கும் எதிரானது.


Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham