அளுத்கம, தம்புள்ள, கிராண்ட்பாஸ் சம்பவங்களை முஸ்லிம்கள் மறக்கவில்லை - நஸார்

Monday, December 15, 20140 comments


அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போதும் சொத்துக்கள் அழிக்கப்பட்ட போதும் அதேபோன்று தம்புள்ள கிராண்ட்பாஸ் மஹியங்கனை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்கள் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானமை மற்றும் சேதத்துக்குட்படுத்தப்பட்டமை ஆகிய அனைத்தையும் முஸ்லிம்கள்  மறந்து விடவும் இல்லை தேர்தல் கால  கண்துடைப்புக்களைக் கண்டு ஏமாந்துவிடப்போவதும் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி அமைப்பாளரும்  முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம். நஸார் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சகல இன மக்களோடும் காலங்காலமாக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் பி.பி.எஸ். என்ற குழு செயற்பட்டு வருகின்றது. அதன் அத்து மீறிய செயல்களுக்கு கடும்போக்கிற்கும் எதிரான அரசு எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இவ்வாறான அரசின் மௌனப்போக்கு முஸ்லிம்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரிக்க முன் வந்துள்ளனர்.

அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கி ஜனாதிபதியின்  நிறைவேற்று ஆட்சி அதிகார காலத்தை நீடிப்பதற்காக 18வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியதே தவிர பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் தேவைகளை பிரச்சினைகளை வாழ்வாதார சுமைகளை தீர்க்க முன்வரவில்லை.

முஸ்லிம்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் உரிய வகையில் தங்கள் மத ஸ்தலங்களை பாதுகாத்து தங்கள் சமய கலாசாரங்களுடன்  பெரும்பான்மை மக்களுடன் ஒற்றுமையுடன் வாழக்கூடிய யுகத்தை ஏற்படுத்த பொதுவேட்பாளர் உறுதி வழங்கி வருகின்றார்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது என்ற பழமொழியுள்ளது. அதைப்போன்று பொது பலசேனா ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்க முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.  தேவைக்கு மாத்திரம் பயன்படும் கறிவேப்பிலையாக முஸ்லிம்களை கருதக்கூடாது என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham