பொது எதிரணிக்கு மு. கா.வின் ஆதரவும் அவசியமில்லை - லாபிர் ஹாஜியார்

Monday, December 15, 20140 comments


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகவும் தேவையில்லை. அது பொது எதிரணிக்கு ஆரவளிக்கவும் தேவையில்லை. ஏனெனில் காங்கிரஸின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இன்றைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கும் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கும் ஒரு மனதாய் திடசங்கற்பம் பூண்டு வெகுநாளாகி விட்டது என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும் கண்டி தேர்தல் தொகுதி அமைப்பாளருமான லாபிர் ஹாஜியார் (ஜெய்னுல் ஆப்தின் ) தெரிவித்தார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று கொத்மலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
 கடந்த மூன்று வருட காலமாக தெற்கிலுள்ள முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அத்தோடு முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் இரு தரப்பாலும் நசுக்கப்பட்டு வந்துள்ளனர். முஸ்லிம்களின் பேரில் அரசியல் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இவ்விடயங்களில் அண்மைக்காலமாக கரிசனை காட்டுவதாக தெரியவில்லை.

இனத்தின் பேரிலும் மதத்தின் பேரிலும் மக்களின் உணர்வுகளைத்தூண்டி ஏனையோருக்கிடையில் குரோதங்களை ஏற்படுத்துவதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவம் எனக் கூறி நாட்டில் ஏதோவொரு வகையில் முஸ்லிம்களை பிரித்து விட்டது.

இது முஸ்லிம்களுக்கோர் சாபக்கேடாகும். அனைத்து இன மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் சமத்துவத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டிய தேவை இருக்கின்றது. இந்நிலையில் இன்று முக்கியமானதோர் அரசியல் நகர்வை நோக்கி எமது நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களும் இதற்கமைய தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர். சமூகம் சரியான தீர்மானத்தை எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளால் தீர்க்கமான முடிவுக்கு வர முடியாதுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள் சமூகத்திற்கு தேவையில்லை. இவர்கள் சமூகத்தை அடமானம் வைத்து ஆட்சி பீடமேறி பதவிகளால் தம்மை அலங்கரித்துக் கொள்ள நினைக்கின்றனர். சலுகைகளுக்கு விலை போகும் இவர்கள் தேசத்துரோகிகளாவர்.

உரிய நேரத்தில் முடிவுகள் எடுத்துக் கொள்ள முடியாத முஸ்லிம் காங்கிரஸ் இம் பொது எதிரணிக்கு வருவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அவர்கள் அரசுடனேயே இருக்க வேண்டும். சமூகம் கற்பிக்கும் பாடத்தை படித்தாக வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham