அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்கு தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டார். ஆனால் வடக்கு முஸ்லிம்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீன் நேற்றைய தினம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி எதிரணியில் இணைந்துகொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ளது. உண்மையில் அவர் விலகுவதாக எம்மிடம் கூறவில்லை. எமக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் கூட அறிவிக்கவில்லை.
கடந்த சனிக்கிழமை கூட நான் அவருடன் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தேன். அத்துடன் அவருடன் நீண்டநேரம் கலந்துரையாடினேன். அப்போது கூட என்னிடம் ஒன்றும் கூறவில்லை. அப்போது சில கவலைகளை கூறினார். ஆனால் செல்வதாக கூறவில்லை.
ஆனால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் இக்கட்சியின் உயர்பீட உறுப்பினர் உள்ளிட்ட பலர் எமது அரசாங்கத்துடன் தொடர்ந்து இருக்கின்றனர். அத்துடன் இக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் எம்முடன் உள்ளனர்.
ரிஷாத் பதியுதீன் அரசியல் கலந்துரையாடல்களை எம்முடன் நடத்தவில்லை. ஒரு சிறிய பிரச்சினை நிலையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அரசியல்வாதியாக இருக்கின்ற ஊடகவியலாளர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம். எமது ஜனாதிபதி ஊடகவியலாளர்கள் அனைவரையும் சமமாக பார்க்கின்றவர்.
ஆனால் இங்கு ஒரு வி்டயத்தை முக்கியமாக கூறவேண்டியுள்ளது. அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எதிரணிக்கு தாவியதன் மூலம் வடக்கு முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுத்துவிட்டார்.
இந்த தீர்மானத்தினால் அப்பாவியாகியுள்ள வடக்கு முஸ்லிம்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுப்பார்கள். ஆனால் வடக்கு முஸ்லிம்கள் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர். அவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்பதனை கூறுகின்றேன்.
ரிஷாத் பதியுதினின் இந்த முடிவினால் மன்னாரில் எமக்கு கிடைக்காமல் இருந்த கத்தோலிக்க மீனவர்கள் தமிழ் மீனவர்கள் எம்முடன் இணைந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. எனவே அதில் இவ்வாறான பக்கம் ஒன்றும் உள்ளது.
ரிஷாத் பதியுதீனின் தீர்மானத்தினால் எமது பிரசார செயற்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவர் இல்லாமலேயே முல்லைத்தீவில் வெற்றிகரமான கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்தினோம். வவுனியாவிலும் சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தினேன்.
தற்போது மன்னாரில் அரசியல் செயற்பாடுகளை கையாள்வதற்காக எம்.பி. க்கள் குழு ஒன்றை மன்னாருக்கு அனுப்பியுள்ளேன். ரிஷாத்தை எமது தேர்தல் முகவராக நியமித்துள்ளோம். அவ்வாறான கட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். தேர்தல் முகவராக நியமிக்குமுன் நான் அவரிடம் கேட்டேன். அவர் எம்முடன் இருப்பதாக திட்டவட்டமாக கூறினார். அதன் பின்னர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை முறையல்ல.
தீர்மானம் எடுப்பதாயின் அதனை கௌரவமாக எடுத்திருக்கலாம். தீர்மானம் எடுப்பதில் பிரச்சினை இல்லை.
பொதுபலசேனா அமைப்பு காரணமாக ரிஷாத் பதியுதீன் பிரிந்து செல்வதாயின் இதற்கு முன்னரே சென்றிருக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பு எம்முடன் இல்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் தற்போது எதிரணியில் உள்ளனர் .
என்னுடன் ரிஷாத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு நான் உதவி செய்ததுஉண்மையாகும். வன்னியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் என்ற வகையில் இவ்வாறு உதவி செய்தேன். வெளிநாட்டவருக்கு அவரை நான் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தும்போது புலிகளினால் பாதிக்கப்பட்டவர் என்று கூறியே அறிமுகப்படுத்துவேன். -
Post a Comment