ரிஷாடினால் முஸ்லிம் சமூகத்திற்கே அபகீர்த்தி - பிரதியமைச்சர் காதர்
Thursday, December 25, 20140 comments
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் இந்நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளார் என பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இவருக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமோக வெற்றியில் பங்காளர்களாக வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட சகல மக்களும் அமைதி, நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களேயாவார்.
முப்பது வருடங்கள் இந்நாட்டுக்குப் பெருந்தலையிடியாக இருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் தான் புலிகளால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தம் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கும் பல்வேறு சேவைகளும் வரப்பிரசாதங்களும் ஜனாதிபதியால்தான் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
அப்படி இருந்தும் ரிஷாட் பதியுத்தீன் எம்.பியின் நடவடிக்கை இந்நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்திற்குமே அபகீர்த்தியாக
அமைந்துவிட்டது. ஜனாதிபதி அவர்கள் அவரது கட்சிக்காக தேசியப் பட்டியல் எம்.பி. பதவி ஒன்றைக் கூட சில வாரங்களுக்கு முன்னர் பெற்றுக்கொடுத்தார்.
அதனையும் பெற்றுக்கொண்டே அவர் எதிரணி அபேட்சகருக்கு ஆதரவு நல்க நடவடிக்கை எடுத்தார்.
இந்நடவடிக்கையை சகல முஸ்லிம்களும் கண்டிக்க வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கே ஆதரவு நல்க வேண்டும். ரிஷாட் எம்.பிக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சகல முஸ்லிம்களும் ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவு நல்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Post a Comment