முஸ்லிம்களிடத்தில் தமது கட்சிக்கு எதிரான விரோதத்தை குறைப்பதற்காகவே மு.கா. கரையோர தனி பரிபாலனத்தை கோருகிறது. இத்தகைய கோரிக்கையானது இனவாதத்தின் பிரவேசமாகும். எனவே நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் ஒற்றுமையான பரிபாலனமே தேவை. இருப்பினும் பிரச்சினைகளின் போது முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காத மு.கா. மீளவும் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஜே.வி.பி. தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கரையோர மாவட்ட பரிபாலன கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கைகளல்ல. இந்த கோரிக்கை முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையல்ல. இனவாத அரசியலை மேற்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையாகும்.
நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த தருணத்தில் அமைதி அரசியலை மேற்கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது விடுத்துள்ள கோரிக்கை நகைப்புக்குரியது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நாட்டு முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர். இந்த விரோதத்தை மறுக்கடிக்கவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு கோரிக்கை விடுக்கிறது.
நாட்டில் ஐக்கியம் மிளிர்ந்து வரும் இத்தருணத்தில் இக் கோரிக்கை விடுத்திருப்பது நாட்டில் இனங்களுக்கிடையில் பிரிவினை வாதம் மீளவும் தோற்றுவிக்க காரணமாக இருக்கும்.
இத்தகைய பிரதிபலனை எதிர்பார்த்ததாகவே மு.கா. வின் கோரிக்கை அமைந்துள்ளது.
எனவே, நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு கோரிக்கையையும் ஜே.வி.பி. ஏற்காது. அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கும் நாட்டையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எனினும் மாவட்ட பரிபாலனத்திற்கு பதிலாக பெறுமதி உரிமை கேட்டிருந்தால் அது நல்லதே. இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

Post a Comment