பொது வேட்பாளரின் சின்னம் மற்றும் நிறம் என்பவற்றை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது வேட்பாளராக போட்டியிடும்போது வேறு ஒரு சின்னம் பயன்படுத்தப்பட வேண்டும். அது குறித்து கலந்துரையாடி வருகின்றோம். ஓரிரு நாட்களில் அதனை வெளிப்படுத்துவோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அதே போன்று ஜாதிக ஹெல உறுமய மற்றும் பல அரசியல் கட்சிகள் உள்ளன. எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த நடவடிக்கையில் இணைந்துக்கொள்ள உள்ளனர்.
அரசியலமைப்பை மாற்றுவதற்கான திருத்தங்களை கொண்டு வந்து 100 நாட்களில் அதனை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அதனை இந்த பாராளுமன்றத்தின் ஊடாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை நூறு வீதம் எமக்குள்ளது. அவ்வாறு முடியாவிட்டால் இரண்டாவது வழியும் உள்ளது. அதாவது பொது தேர்தலை நடத்த முடியும் என்றார்.

Post a Comment