மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அரசியலில் நீதி, சமத்துவம், நல்லாட்சி என்ற பொதுவான விடயங்களில் இன மத மொழி குல, நிற வகுப்பு பேதங்களுக்கு அப்பால் மனித குல மேம்பாட்டிற்காக செயற்படுவது விதிக்கப்பட்ட கடமையாகிறது.
அதேபோல் இன, மத மொழி, குல, நிற வேறுபாடுகளுக்கும் பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் தாங்களோ அல்லது வேறு எந்த சமூகமோ உள்ளாகின்ற பொழுது அவற்றிற்கு எதிராக தமக்கு முன்னால் உள்ள சகல வழி வகைகளிலும் போராடுவதும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாகும்.
அக்கிரம் ஆட்சியாளர்கள் எந்த இனத்தை மதத்தை குலத்தை நிறத்தை வகுப்பைச் சேர்ந்தவர்களாயினும் சரியே அதாவது இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரியே.
ஒருநாட்டின் சர்வாதிகாரி ஆட்சியாளன் மன்னராக இருந்தாலும் சரி, தெரிவு செய்யப்பட்ட அரச அதிபராக இருந்தாலும் சரி நல்லாட்சி விழுமியங்களை உத்தரவதப்படுத்துகின்ற அமானிதமான தார்மீகப் பொறுப்பே அவரிடம் கையளிக்கப் படுகின்றது.
நீதி நேர்மை சமாதானம், பொருளாதார மேம்பாடு, கல்வி, உர்கல்வி, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகள், சுகாதாரம் என சகல துறை அபிவிருத்தி திட்டங்களிலும் சமத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்தி, சர்வாதிகாரம்,அராஜகம், ஊழல், மோசடி, இன, மத மொழி, குல நிற பாகுபாடுகள் அடக்குமுறைகளை ஒழித்துக் கட்டுகின்ற ஆட்சிக் கட்டமைப்புகளை நோக்கிய போராட்டங்களில் முன்னிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.
எந்தவொரு ஆன்மாவையும் சமூகத்தையும் அதன் சக்திக்கு அப்பால் எதனையும் சாதித்துவிடுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ் எதிர்பார்ப்பதில்லை.
அந்தவகையில் தற்பொழுது எமது நாட்டில் இருக்கின்ற குறைந்தபட்ச ஆட்சிக் கட்டமைப்புகளான ஜனநாயக ஸ்தாபனங்களை, அதிகார மையங்களை, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துகின்ற நிறுவனங்களை, நீதித்துறையை, பொது நிர்வாக சேவைகளை, தேர்தல் ஆணையகத்தை மற்றும் தேர்தல் முறைமைகளை ,இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, மத கலாச்சார சுதந்திரத்தை, சமாதான சகவாழ்வை முற்போக்கு சக்திகளுடன் இணைந்து கட்டிக் காப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகிறது.
அந்த வகையில் இந்த நாட்டின் சாபக்கேடாக பார்க்கப்படுகின்ற வரைமுறைகளற்ற எதேச்சாதிகார நிறைவேற்று அதிகாரங்கள் மிக்க ஜனாதிபதி முறையினை ஒழித்து மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தி நல்லாட்சி குணாதிசியங்களை உறுதிப்படுத்துகின்ற ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை, சுயாதீனமான அரச அங்கங்களை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்கு இருக்கின்றது.
இந்த தேசத்தின் முற்போக்கு சக்திகளின் தொடந்தேர்ச்சியிலான போராட்டங்களுக்குப்ப் பின்னர் சுயாதீனமான பொலிஸ் சேவை, சுயாதீனமான பொதுச்சேவைகள், சுயாதீனமான தேர்தல், சுயாதீனமான நீதித்துறை என நல்லாட்சிக் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் மீது கொடுவரப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தை ஆளும் ஐக்கிய முன்னணி 18 ஆவது திருத்தம் ஒன்றின் மூலம் வலிதற்றதாய் ஆக்கியமை மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.
துரதிஷ்டவசமாக மேற்படி 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை மூன்றில் இரு பெரும்பான்மையுடன் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் எதேச்சதிகார ஜனாதிபதி முறையின் வரம்புகளை மேலும் விஸ்தரிக்கவும் பதவியில் இருக்கின்ற அதிபர் தொடர்ந்தும் ஜானாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் மூலம் சர்வாதிகாரம் நீடிக்கவும் முஸ்லிம் தனித்துவ அரசியலின் பெயரால் -உண்மையான இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகளுக்கு முரணாக - ஆதரவு வழங்கப்பட்டமை மிகப் பாரிய அரசியல் வரலாற்றுத் தவறாகும்.
இவ்வாறான ஒரு நெருக்கடியான அரசியலமைப்பு மற்றும் வலுவேறாக்கல் சர்ச்சைகள் நாட்டில் இடம் பெறுகின்ற ஒரு கால கட்டத்தில் தான் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது.
"தூய நாளை" "பிவிதுரு ஹெடக்" "கிளீன் டுமாரோ" என்ற முன்னெடுப்பிற்கான தேசிய கவுன்ஸில் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் மீதான உத்தேச 19 சீர்திருத்த பிரேரணை முன்மொழிவுகளை முழுவதுமாக வாசித்தேன்.
வரை முறைகளற்ற நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிமுறைக்குப் பதிலாக, வரை முறைகளுடன் கூடிய தேசத்தின் தலைவராக ஜனாதிபதியும், பாராளுமன்றத்தின் மேலான்மையை உறுதிப்படுத்தும் அதிகாரங்களை உடைய அரசின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பதற்கான சீர்திருத்தப் பிரேரணைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதேவேளை ஏற்கனவே 17 சீர்திருத்தப் பிரேரணை அறிமுகப்படுத்திய சுயாதீனமான நீதித் துறை, தேர்தல், பொதுச் சேவைகள், பொலிஸ், ஊழல் மோசடி ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல், அரசியலமைப்பு கவுன்சிலுக்கான பிரதிநிதிகள் நியமனம்...
தொகுதிவாரி தேர்தல் முறையுடன் மட்டுபடுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறை, சகல சமூகங்களினதும் பிரதிநிதித் துவத்தை உறுதி செய்யும் தேர்தல் தொகுதி எல்லைகளின் மீள் நிர்ணயம் என பல்வேறு முற்போக்கான தேசத்தினதும் சகல சமூகங்களினதும் நலன்களை இலக்காக கொண்ட முன்மொழிவுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
கடந்த காலங்களில் தேசத்திற்கும் சிறுபான்மையினருக்கும் பாதகாமான பல சட்டவக்கங்களுக்கு கை தூக்கி ஆதரவளித்த நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மேற்சொன்ன 19 ஆவது சீர்திருத்த மொழிவுகளை ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டும்.
கீழ்காணும் விடயங்களில் தெளிவு தேவைப் படுகிறது
ஜனாதிபதி சட்டத்திற்கு மேலாக இருப்பாரா இல்லையா ? என்ற விடயத்தில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை, அதேபோல் அவர் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது, (இருப்பது ஆபத்தானது) ஒரு முறை மாத்திரமே அவர் ஜனாதிபதியாக இருக்க முடியும், ஆனால் பின்னர் பொதுத் தேர்தல் மூலம் பிரதமராக வர முடியுமா..? என தெளிவாக கூறப்பட வில்லை...
முஸ்லிம் புத்திஜீவிகள், சமூக நல அமைப்புக்கள், சட்ட வல்லுனர்கள் கலாத்தின் கட்டாயம் கருதி அதனை ஆராய்ந்து பாருங்கள்.
ஒரு சில திருத்தங்களுடன் முஸ்லிம் சமூகம் இதற்கு முழு ஆதரவையும் வழங்க முடியும் , வேண்டும் என்று நான் கருதுகின்றேன்.

Post a Comment