ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மக்களின் அபிலாசைகளுக்கமைவாகவே எமது தீர்மானம் அமையும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
கேள்வி: ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பொன்றிற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இது தொடர்பில் அ.இ.ம.கா.வின் நிலைப்பாடு என்ன?
எமது கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எதிர்வரும் 24 ஆம் திகதி கட்சியின் உயர்பீடம் கூடவுள்ளது. இதன்பின்னரே கட்சியின் தீர்மானம் வெளியிடப்படும்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் அ.இ.ம.கா. எவ்வாறான கோரிக்கைகளுடன் அரசினதோ அல்லது எதிரணியினதோ வேட்பாளரை ஆதரிக்கும்?
ஜனநாயகத்தை பேணி சட்டத்தை மதிக்கக் கூடிய ஒருவேட்பாளரையே நாம் ஆதரிப்போம். நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் முக்கியமாக சிறுபன்மையின மக்களுக்கு சேவையாற்றும் ஒருவருக்கு முன்னுரிமையளிப்போம். நல்லென்ன வெளிப்பாட்டுடன் சிறந்த ஒருவரை ஜனாதிபதியாக்க பாடுபடுவோம்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகளை முன்னிறுத்தி அதற்கு காத்திரமான தீர்வை முன்வைக்கவேண்டியுள்ளது. சிறுபான்மையின மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து சுபீட்சமான எதிர்காலத்தையும் வேண்டிநிற்கிறோம். வளமான நாட்டை கட்டியெழுப்பும் தலைமைக்கு முன்னுரிமை வழங்கி அவரை ஆதரித்து அவரின் வெற்றிக்காக பாடுபடுவோம்.
கேள்வி: இலங்கையில் குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே மாறுபட்ட மனநிலையிருக்கின்றபோது உங்கள் கட்சி எவ்வாறான தீர்மானத்திற்கு வரும்?
கட்சியின் நிலைப்பாடு எவ்வாறிருப்பினும் மக்களின் மனநிலைக்கேற்றவாறே அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் மக்களின் மனோநிலைக்கு முக்கியத்துவமளித்து எமது தீர்மானத்தை எடுப்போம். மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு அரசியல் செய்ய முடியாது.
கேள்வி: முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருவேட்பாளரை ஆதரிப்பதினூடாக முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை நிரூபித்து மீண்டும் பேரம் பேசும் சக்தியை பெற முடியுமா?
நிச்சயமாக பேரம்பேசும் சக்தியை மீண்டும் பெறுவதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணையவேண்டும். நாமும் ஏனைய கட்சிகளுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

Post a Comment