நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (என்.எப்.ஜி.ஜி.) எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் நஜாமுஹம்மத் தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மக்களுக்கு விசுவாசமான நல்லாட்சி விழுமியங்களின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி முறையொன்றினை நிறுவும் நோக்கில் செயற்படும் ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் நாடு எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான முயற்சியில் களமிறங்கியுள்ள தேசிய சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளது. இதனடிப்படையில் பொது எதிரணியினருடன் கூட்டிணைந்து நல்லாட்சிக்காக பாடுபடவுள்ளது.
கேள்வி: நீங்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் களமிறங்குவதன் நோக்கம் என்ன?
இன்று சட்டம், ஒழுங்கு, நீதி, ஜனநாயகம், சுதந்திரம், பாதுகாப்பு என்பன சீர்குலைந்துள்ளன.பொருளாதார முறையில் திருப்தியில்லை. சகல துறைகளிலும் ஊழல், மோசடி, வீண்விரயம், அதிகாரத் துஷ்பிரயோகம் என்பன மலிந்து காணப்படுகின்றன. நாட்டின் வளங்களும், சொத்துக்களும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்கப்படுகின்றன. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தேசிய ஒற்றுமை மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பவற்றிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய சூழலை இந்த அரசாங்கம் தொடர்தும் விட்டு வைத்துள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டினைப் பாதுகாப்பதும் விடுவிப்பதும் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் மீதுள்ள தலையாய கடமையாகும். அதனை அடிப்படை நோக்காகக்கொண்டோ நாம் தேர்தலில் களமிறங்குகின்றோம்.
கேள்வி: எதிரணியினருடனான தேர்தல் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மேலும் வலுப்படுத்தத்தக்கதான 18வது திருத்தச்சட்ட உருவாக்கப்பட்டு அவர் மீது அபரிமிதமான அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கி, 17 வது திருத்தச்சடட்டத்தினூடாக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் உருவாக்கி, தேர்தல் முறைகளிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பான பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்துள்ளது.
அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்குப் பதிலாக 19 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்து பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்களை அளிக்கத்தக்க வகையிலும் முன்னெடுத்துவரும் அரசியல் வேலைத்திட்டத்திலும் ஆதரவை வழங்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

Post a Comment