ஐக்கிய தேசிய கட்சியூடாக நிறுத்தப்படும் பொது வேட்பாளரை ஆதரிப்பதினூடாக முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
பொது எதிரணியின் வேட்பாளரை ஆதரிப்பதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது. அந்தவகையில் அண்மைக்காலமாக பொது எதிரணியினருடன் இணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே குறித்த பொது வேட்பாளர் களமிறக்கப்படவேண்டும். அவர் எதிரணியினரின் பொது வேட்பாளராக இருக்கவேண்டும்.
கேள்வி: நீங்கள் பொது எதிரணியினரிடம் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள்?
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும்பட்சத்தில் மூன்று தொடக்கம் ஆறு மாதத்திற்கு நிறைவேற்று அதிகார முறைமையை இரத்து செய்துவிட வேண்டும்.
குறித்த பொது வேட்பாளர் பௌத்த பீட மகாநாயக்க தேரர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் நம்பக்கூடிய ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்கவேண்டும்.
அவர் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க தலைவர்களுக்கு மத்தியில் கடிதம் மூலம் சத்தியக் கடதாசி மூலம் உறுதி செய்யவேண்டும். இதனிடையே இவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எமது கட்சி முன்வைத்துள்ளது.
கேள்வி: பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதினூடாக எதனை எதிர்ப்பார்க்கிறீர்கள்?
மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்திலேயே முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது போன்று ஐக்கியதேசிய கட்சியின் காலத்தில் முஸ்லிம் எதிர்ப்பு நிலைப்பாடுகள் இருந்ததில்லை. எனவே ஐ.தே.க.வின் ஜனாதிபதி பொதுவேட்பாளரை நம்பி அவரை ஆதரிப்பதினூடாக எதிர்காலத்தில் நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழிகிடைக்கும்.
கோமாநிலையில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று கரையோரமாவட்டம் பற்றி திடீரெனபேசுவதுபோல் நாம் இருக்கவில்லை. எனவே தொடர்ச்சியாக முஸ்லிம்களின் நலன்தொடர்பில் சிந்தித்து பொது வேட்பாளரை ஆதரிப்பதனூடாக சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையே எதிர்ப்பார்க்கிறோம்.

Post a Comment