கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும்போது அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதன் பதில் கிடைத்த பிறகு எமது நிலைப்பாட்டை வெளியிடுவோம் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.
அவருடனான நேர்காணல் வருமாறு,
நாம் இதுவரை எந்த தீர்மானத்திற்கும் வரவில்லை. ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம். நாம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும்போது அரசாங்கம் எமக்களித்த வாக்குறுதிகள் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதன் பதில் கிடைத்த பிறகு எமது கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாட்டை வெளியிடுவோம்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளரிடம் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றீர்கள்?
முஸ்லிம்களின் தேசிய பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் முன்வைக்கவுள்ளோம். வாருங்கள் எங்களுடன் இணைந்து செயற்படுங்கள் என்று கூறும்போது எடுத்த எடுப்பில் நாம் யாருடனும் இணைந்து செயற்படப்போவதில்லை. எமக்கென்றொரு கொள்கை இருக்கின்றது. அதுபோன்று எமக்கானதொரு பொறுப்பும் இருக்கின்றது. இவற்றை அடிப்படையாகக்கொண்டு நாம் பலகோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவிப்பவர்களையே ஆதரிப்போம்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முன்னெடுப்புகள் எவ்வாறு இருக்கின்றன?
இன்று இடதுசாரிகள், வலதுசாரிகள், சோசலிசவாதிகள், கொமியுனிஸ வாதிகள் என்ற இருக்கமான நிலைப்பாடுகள் மாற்றம்பெற்று எல்லோரும் கலந்துள்ளனர். இந்நிலையில் நாமும் எல்லா தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுடன் கூட்டுக்கு முயற்சிப்பது என்பது அர்த்தப்படாது. எமது நிலைப்பாட்டையே அவர்களிடம் தெரிவிக்கிறோம்.
கேள்வி: ஆளும் மற்றும் எதிர் தரப்பினரிடமிருந்து மு.கா.விற்கு அழைப்புகள் வருகின்றனவா?
ஜனாதிபதி தேர்தல் தற்போது இல்லவிளையாட்டு போட்டிபோன்று இருக்கின்றது. தங்களது வெற்றிக்காக யாரையும் கூட்டுச்சேர்த்துக்கொள்ளத்தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் சிறுபான்மை மக்களை பிரதான கட்சிகள் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. ஆளும் தரப்பிலிருந்தும் ஐ.தே.க. உள்ளிட்ட எதிர்தரப்பும் நேரடியாக அழைப்புவிடுக்கவில்லை. என்றாலும் நாம் நிபந்தனை அடிப்படையிலேயே யாரையாவது ஆதரிப்போம்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மு.கா.வின் ஆதரவாளர்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது?
அண்மையில் அம்பாறையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது ஜனாதிபதிக்கு ஆதரவாக மு.கா.வில் சிலர் கருத்துக்களை முன்வைத்தபோது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை பற்றியும் நாம் கவனத்திற்கொள்கிறோம்.

Post a Comment