கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வேன் - பஷீர் ஷேகுதாவூத்
Thursday, November 13, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த தீர்மானத்துக்கு அமையவே தான் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உங்களின் ஆதரவு யாருக்கு என்று அவரிடம் இன்று புதன்கிழமை (12) வினவியபோதே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிப்பது என்று இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீடம் கூடி இதற்கான முடிவை எடுக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த முடிவுக்கு இசைவாகவே நான் முடிவெடுப்பேன்.
ஆனால், என்னுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நான் கட்சியின் அரசியல் அதியுயர்பீடக் கூட்டத்தில் முன்வைப்பேன். அந்தக் கருத்துக்களுக்கு உடன்பட்ட வகையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர்பீடத்தில் இருக்கின்ற உறுப்பினர்களையும் எனது கருத்தின்பால் வென்றெடுப்பதற்கான முயற்சிகளை அரசியல் அதியுயர்பீட கூட்டங்களில் நான் செய்வேன்.
கடந்த காலங்களிலும் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் இருந்த காலத்திலிருந்து அதியுயர்பீடக் கூட்டங்களில் நான் கருத்துக்களை தெரிவித்து அதன் பால் பெரும்பான்மையானவர்களை ஈர்த்த அனுபவம் எனக்கு உள்ளது. இந்தக் காலகட்டத்திலும் எதிர்வரும் தேர்தல் வியூகங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்றும் அந்த வியூகங்கள் எவ்வாறு அமைந்தால், முஸ்லிம்களுக்கு நன்மையானது போன்ற கருத்துக்களை கூறி பெரும்பாலான உறுப்பினர்களை ஈர்க்க முடியும்.
அவ்வாறு ஈர்க்கமுடியாவிட்டால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானம் பிழையாக இருந்தாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கட்சியின் தீர்மானத்துக்கு ஆதரவாக உடன்பட்டு செயற்படுவேன்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எனது ஆலோசனையை கட்சியின் அரசியல் அதியுயர்பீடத்தில் தெரிவித்தேன். ஆனால், எனது ஆலோசனை அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தீர்மானமாக எடுக்கப்படவில்லை. எனினும், கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமைய கட்சிக்கு கட்டுப்பட்டு செயற்பட்டேன்' எனக் கூறினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
Post a Comment