கல்வி பின்னடைவுக்கு அரசியல் வாதிகளே காரணம் என கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்
மத்திய மாகாணத்தின் கல்வித்துறை முழுமையாகவே அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதாக சனிக்கிழமை பாராளுமன்றத்தில் மேலும் குற்றம் சாட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. எம்.எச்.ஏ. ஹலீம், அரசியல்வாதி ஒருவர் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் மேற்கொள்வாரேயானால் அரசியல்வாதி என்ற நாமத்தை பாதணி போன்று வெளியில் கழற்றி வைத்து விட்டே பாடசாலைக்குள் நுழைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஹலீம் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்
பரீட்சைப் பெறுபேறுகளில் கண்டி மாவட்டம் தமிழ் மொழி மூலம் இரண்டாம் நிலையிலேயே தொடர்ச்சியாக இருந்து வந்தது. எனினும் அது தற்போது ஒன்பதாம் நிலைக்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அந்தளவில் கண்டி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி நிலை வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. இருந்த போதிலும் தற்போது மத்திய மாகாண முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதேநேரம் மத்திய மாகாணம் கல்வி நிலையில் பின்னிலை காண்பதற்கு அரசியல்வாதிகளே காரணர்களாக இருக்கின்றனர். ஆகவே அரசியலுக்கும் கல்வித்துறைக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள் உணரப்பட்டு கல்வித் துறையிலிருந்து அரசியல் வேறுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். மத்திய மாகாணத்தைப் பொறுத்த வரையில் கல்வித்துறையில் அமர்த்தப்பட்டிருக்கும் தகைமைகளுக்கு ஏற்ற வகையில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாகவே இங்கு நியமனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அதுமாத்திரமின்றி கண்டி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் உள்ளீர்த்த வகையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோரை அழைத்து அரசியல் ரீதியில் கலந்துரையாடி எதிர்வரும் தேர்தல்களுக்கான வாக்கு சேகரிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாலேயே இப்படியான வாக்கு சேகரிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இது தவறாகும்.
அரசியல்வாதி ஒருவர் பாடசாலை ஒன்றுக்கு செல்வாரேயானால் அவர் அரசியல்வாதி என்ற நாமத்தை பாடசாலைக்கு வெளியே பாதணியாக கழற்றி வைத்து விட்டே உள்நுழைய வேண்டும். இந்நிலை கடைப்பிடிக்கப்பட்டால் இலங்கையின் கல்வித்துறை மேன்மையடையும் என்றார்.

Post a Comment