பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துபிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீனப் பிரச்னைக்கு முடிவு கட்டும் “தனி நாடு தீர்வை’ வலியுறுத்தி, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் குறிப்பிட்டன.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 650 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில், பாதிக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்த நிலையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்ப்ட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 274 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர். “இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள தனி நாடாக, பாலஸ்தீனத்தை பிரித்தானிய அரசு அங்கீகரிக்கிறது’ என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் காஸாவில் நடைபெற்ற போருக்குப் பின்பு, பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட இந்தத் தீர்மானம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் என்று தெரிவித்த எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானத்தை ஆதரித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எம்.பி.களும் வாக்களித்தனர்.
இதுகுறித்து தொழிலாளர் கட்சி எம்.பி. கிரஹம் மோரிஸ் கூறியதாவது:
பலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதால், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நீங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
பலஸ்தீனப் பிரச்னைக்கு “தனி நாடு’ மட்டுமே தீர்வாக அமையும். பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க இனியும் நாம் தயங்கினால், அந்தத் தீர்வைக் கூட எட்ட முடியாமல் போய்விடும் என்றார் .
கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.யும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பேரனுமான நிக்கோலஸ் சோம்ஸ் கூறுகையில், “தார்மிக அடிப்படையில் மட்டுமன்றி, பிரிட்டனின் நலன்களைக் கருத்தில் கொண்டும் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து .
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், பிரித்தானியாவின் ராஜீய ரீதியிலான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
மேற்கு ஆசிய விவகாரத் துறை அமைச்சர் டோபையாஸ் எல்வுட் கூறுகையில், “அமைதியை நிலைநாட்ட பலஸ்தீனம் உதவினால் மட்டுமே அதனை ஒரு நாடாக அங்கீரிப்போம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என ஸ்வீடன் பிரதமர் ஸ்டெபான் லோப்வென் கூறியிருந்தார்.
அதனை பாலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றாலும், இஸ்ரேல் அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
1967-ஆம் ஆண்டு நிகழ்ந்த அரபு – இஸ்ரேல் போரின்போது இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சேர்த்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஜ.நா. பொதுச் சபையில் 2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
உலகின் பெரும்பாலான நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தாலும், அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்தன.
தங்களது தனி நாட்டின் ஒரு அங்கம் என பலஸ்தீனம் கூறிவரும் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைக்கப்படுவதற்கு மேலை நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானத்துக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு அங்கீகரிப்பதானது பலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகளைக் குலைக்கும் என இஸ்ரேல் கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எட்டப்படுவதற்கு முன்னரே பிரித்தானிய பாராளுமன்றம் பலஸ்தீனத்துக்கு அவசர கதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த அங்கீகாரத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, இஸ்ரேலின் கோரிக்கைகளை பலஸ்தீன தலைமை உதாசீனப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, இந்தப் பிரச்னையில் அமைதித் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு சீர்குலைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment