ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் மட்டுமே முஸ்லிம் சமூகம் தமது சுதந்திரமான மத வழிபாடுகளையும் கலை, கலாசாரங்கள் பொருளாதாரம் மற்றும் நிலபுலங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியுமென முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ஏ. அப்துல் மஜீட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட உறுப்பினராகவிருந்த இவர் ஐக்கிய தேசிய கட்சியில் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட மு.கா. கட்சியானது இன்று முஸ்லிம் சமூகத்தை பயங்கரமானதொரு நிலைக்கு கொண்டு செல்கின்றது.
அக்கட்சியானது தனது குறிக்கோள் நோக்கம் என்பனவற்றை மறந்து தனிப்பட்டவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஒரு இயக்கமாக பாதை மாறி செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு செல்வதன் மூலம் சமூகத்திற்கு எந்தவிதமான நன்மைகளையும் பெற்றுக்கொடுக்க அதனால் முடியாது. மாறாக இனவாதங்களை பேசி சமூகத்தை சந்தேகக்கண்கொண்டு நோக்கும் நிலையையும் பேராபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
இன ரீதியான சிந்தனைகளை விதைத்து பெரும்பான்மை இனத்தவர்களும் இன ரீதியாக சிந்தனை செய்வதற்கு வழிசமைத்து கொடுத்தவர்கள் சிறுபான்மையின அரசியல்வாதிகளே ஆகும்.
இந்த நாட்டின் இன ரீதியான அரசியல் கலாசாரம் இருக்கும் வரையில் சிறுபான்மையின சமூகங்கள் பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்படும்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போதே முஸ்லிம்கள் அதிக நன்மைகளைப் பெற்று வந்துள்ளனர். அதனால்தான் முஸ்லிம்கள் இன்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் நிற்கின்றது.
அளுத்கம வன்செயலின் போது எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் குரல் கொடுக்காத போது ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவப்பெரும தமது உயிரையும் துச்சமாக மதித்து முஸ்லிம்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல் தனது பதவியையும் இராஜினாமா செய்வதற்கு முற்பட்டார் என்பதனை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்க முடியாது. ரவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பேற்று இன்றுவரை சமூகத்திற்காக செய்த பணி என்ன? என்று அவரிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.
எனவே, இனியும் அக்கட்சியில் இருப்பது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகவே நினைத்து அக்கட்சியிலிருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணைந்துள்ளேன்.
மு.கா. தலைமைத்துவம் இனியும் முகத்திரையிட்டு மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய மாகாணத்தில் செல்ல முடியாது. அங்கு முஸ்லிம்கள் அசாத்சாலியை பலப்படுத்தியுள்ளனர். அவ்வாறே ஊவா மாகாணத்திற்கு சென்ற போதும் மக்கள் மறக்க முடியாத பரிசினை கொடுத்துள்ளனர்.
இனிமேல் அரச தரப்பிலுள்ள எந்தக்கட்சியையும் அம்பாறை மாவட்டத்திலுமுள்ள மக்களும் நம்புவதற்கில்லை. அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி என்னை நியமித்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு பிரதேசமும் சென்று கட்சி புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளோம் எனத்தெரிவித்தார்.

Post a Comment