எமது கோரிக்கை செவிமடுக்கப்படாமல் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் வணக்கம் கூறி வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படலாம் என
ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சாலிய சுமேத தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
கடந்த 9ஆம் திகதி ஊவா மாகண சபையின் முதல் அமர்வில் சபையின் பிரதித்தலைவர் நியமனம் எனக்கு வழங்கப்பட்டது. அப்பதவி மூலம் எனக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியாது. எனக்கு வழங்கப்பட்ட அப்பதவி சபையின் சாதாரண உறுப்பினர் பதவிக்கு நிகரானதாகும்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று நான் வெற்றி பெற்றிருக்கின்றேன். எனக்கு விருப்பு வாக்குகளை வழங்கிய மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் இருந்து வருகின்றனர். அவ் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமானால் மாகாண அமைச்சர் பதவியொன்றினால் மட்டுமே சாத்தியப்படும். அவ் அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து சபையின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன்.
ஆனால், எனது கோரிக்கை எவ்வகையிலும் பரீசீலிக்கப்படாமலும் என்னுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தாமலும் அமைச்சு பதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. எனது கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை தொடர்ந்தும் இந்நிலை இருக்குமானால் வணக்கம் கூறி வெளியேற வேண்டிய நிலையும் எனக்கு ஏற்படலாம் என்று கூறினார். இவர் அமைச்சர் சுமேதா ஜே ஜயசிங்கவின் புதல்வராவார். அமைச்சர் சுமேதாவும் அரசின் மீது அதிர்ப்திகொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment