-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'இலங்கையில் ஆட்சிகள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால், சிங்களக் கடும்போக்குவாதம் மாறுவதற்கோ மறைவதற்கோ எதிர்காலத்தில் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை பகிரங்கமாகக் கூறுகிறேன்' என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மேலும்,
'எந்த சட்டப் பிரச்சினைகள் இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் வந்தே தீரும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற எந்த அரசியல் தலைவர்களும், நாட்டில் தற்போது நிலவுகின்ற சிங்கள கடும்போக்கு வாதத்தை எதிர்த்து எந்த கருத்தையும் கூறப்போவதில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், பொது பல சேனா, அதன் தீவிர செயற்பாட்டாளர் ஞானசார தேரர், ராவண பலய, ஜாதிகஹெல உறுமய என்பவற்றை தடைசெய்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவினால் பகிரங்கமாகக் கூற முடியுமா?
தீவிர கடும்போக்கு வாதத் தலைவர்களைக் கைதுசெய்து உள்ளே அடைப்பேன் என்று ஒரு வார்த்தைதானும் பகிரங்கமாகக் கூற முடியுமா?, இந்த உத்தரவாதத்தை இன்று நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கூட கொடுக்க முடியாது.
எனவே, எந்த அரசியல் உபாயத்தை நாங்கள் கைக்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்கள் அவரசமாகவும் அவசியமாகவும் நின்று நிதானித்து தீர்மானம் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நமது சமூகம் உறுதியான யதார்த்தமான நிலைப்பாட்டை எடுக்கத் தவறும் பட்சத்தில் அதன் பாதிப்புக்கள் 2022 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment