மத சடங்குகளை சரிவர நிறைவேற்ற இடமளிக்கப்பட வேண்டும் - தொழிலாளர் சங்கம்
Sunday, October 12, 20140 comments
மல்வானை முஸ்லிம் அனாதை நிலையத்தில் ஏற்பட்ட சம்பவமானது கண்டிக்கத்தக்கதாகும். தங்களுடைய மத சடங்குகளை சரிவர நிறைவு செய்ய அந்த மதத்தவருக்கு இடமளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய லங்கா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் ராஜு பாஸ்கரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;
பால் தரும் பசுக்கள் 365 நாட்களும் இறைச்சிக்காக அறுக்கப்படுகின்றன. அதை நிறுத்தாது முஸ்லிம்களின் மத சடங்குகளில் தடை ஏற்படும் விதத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாக அமையும். நாட்டின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்ற எண்ணம் தோன்றுகின்றது.
இந்த பசுக்களை வெட்டுவதற்காகதான் வாங்கி செல்கின்றார்கள் என தெரிந்து விற்பவர்களை முதலில் கண்டறிந்து அவர்களை அவ்வாறு விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட வேண்டுமே தவிர இஸ்லாமியர்களின் புனித பெருநாள் தினத்தில் உழ்ஹியாவிற்காக மாடுகளையும் ஆடுகளையும் அறுப்பதை தடுப்பதானது அநாகரிகமான செயலாகும்.
இவ்விடயத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் மத தலைவர்களும் ஒன்றிணைந்து இது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாதவாறு ஒரு திட்டம் வகுக்க வேண்டும்.
இஸ்லாமியர்களின் மத சம்பிரதாயங்கள் சரிவர கடைப்பிடிக்க அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்
இந்துக்களுக்கும் தங்களுடைய பாரம்பரிய திருவிழாவாகிய வேட்டைத் திருவிழாக்களை நடாத்த விடாது தடுத்து வருகின்றனர். அதற்கு கடந்த அரசு காலம் தொட்டு இன்றுவரை அரசும் துணை போகின்ற ஒரு தொழிற்சங்கவாதி என்ற நிலையில் நாம் இதற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
தோட்ட தொழிலாளர்கள் வருடந்தோறும் காடுகளிலும் மலைகளிலும் மிக கஷ்டத்தின் மத்தியில் வேலை செய்து பல்வகையான பிராணிகளிடமும் இடி மின்னல் தாக்கங்களிலிருந்தும் இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்களின் காவல் தெய்வங்களிடமும் குல தெய்வங்களிடமும் பல்வகையான வேண்டுதல் வைத்து தங்களுடைய தொழிலையும் தாங்கள் தொழில் புரியும் தோட்டங்களையும் காக்க வேண்டும் என்று வேண்டி காவல் தெய்வங்களுக்கு வேட்டை திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்து வேட்டை திருவிழாக்களை நடத்த முடியாதவாறு இவர்களுடைய செயற்பாடுகள் இருந்து வருகின்றன. வேட்டை திருவிழாக்களை நடாத்த தடை செய்து அவர்களின் மத சுதந்திரத்தை இல்லா தொழித்துள்ளனர்.
தோட்ட தொழிலாளர்கள் மிக செறிவாக வாழும் பகுதிகளின் வேட்டைத் திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. காலி, மாத்தளை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலே நடாத்த முடியாதவாறு பல தடைகளை ஏற்படுத்துகின்றனர். இத் தடைகளிலிருந்து மீண்டும் எமது மத சடங்குகளை சரிவர செய்ய அனைத்து மதத்தவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நேற்று இந்துக்களுக்கு இன்று இஸ்லாமியர்களுக்கு. நாளை யாருக்கோ?
இந்துக்களும் இஸ்லாமியர்களும் அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய லங்கா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் ராஜு பாஸ்கரன் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment