ஞானசார தேரர் தான் விடுத்த நேரடி விவாத சவாலிலிருந்து நழுவுகின்றமை அவரின் தயக்கத்தின் வெளிப்பாடாகும் என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் இதன்மூலம் அவரது சவால் வெறும் வாய்ச்சவாடலே என்பது புலனாகிறது எனவும் குறிப்பிட்டர்.
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கொழும்பில் இடம்பெற்ற சங்க சம்மேளன கூட்டத்தின்போது முஸ்லிம் தலைவர்களை நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்னெடுத்துவரும் பொய்ப் பிரசாரங்கள் குறித்து நேரடி விவாதத்திற்கு தயாரென அறிவித்து மேற்படி அமைப்பின் செயலாளருக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பிவைத்தார்.
இவ்விடயம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,
பொது பல சேனா அமைப்பும் அதன் செயலாளரும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவையாகும். முஸ்லிம், சிங்கள மக்கள் நீண்டகாலமாகவே இந்நாட்டில் மிகவும் நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களால் பெரும்பான்மையினமான சிங்கள மக்களுக்கு பல இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளமை அப்பட்டமான பொய்யாகும்.
ஞானசார தேரரினதும் பொதுபலசேனாவின் செயற்பாடுகளே முஸ்லிம், சிங்கள இன உறவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயங்கள் குறித்து நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு விரும்பினால் வருமாறும், அதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கான ஏற்பாட்டை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பிவைத்தேன். எனினும் அந்த கடிதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
கொழும்பில் இடம்பெற்ற சங்க சம்மேளன மாநாட்டில் முஸ்லிம் தலைவர்களையே விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். எனினும் ஆளும் தரப்பு அரசியல் தலைவரா, எதிர்த்தரப்பு அரசியல் தலைவரா அல்லது வேறு தலைவர்களா என்று அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் எனது சவாலை எற்றுக்கொள்ளாத அவர் என்னை நெத்தலி மீன்களுடன் விவாதிக்க தயாரில்லை எனக் கூறியுள்ளார். அப்படியாயின் அவர் கூறும் பெரிய மீன்கள் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் இரண்டு தடவை மாகாண சபை உறுப்பினராக செய்றபட்டுள்ளேன். 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன். இந்நிலையில் ஞானசார தேரரை பற்றி பார்த்தால், அவர் எந்த விகாரையிலும் தலைமை பிக்குவாகக்கூட இருந்ததில்லை. சங்க சாசன பாதுகாப்பு கமிட்டியிலும் அவருக்கு உறுப்புரிமை கிடையாது. இந்நிலையில் என்னை அவர் நெத்தலி மீன் என தெரிவித்திருக்கின்றமை மிகவும் நகைப்புக்குரியதாகும்.
அவர் அரசியலுக்காகவே இந்த வாய்சவாடல்களை விடுகிறார். உண்மையில் அவருக்கு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ளும் தைரியம் கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான மதவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment