கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும். இது எனது நீண்ட கால நோக்கம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும். இது எனது நீண்ட கால நோக்கம். எக்காரணம் கொண்டும் வேறு ஒரு இனத்தவர் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராக வருவதற்கு இடமில்லை. ஆனால் எமது மக்கள் சரியாக மூளையை பயன்படுத்தாமையால் கிழக்கு முதலமைச்சர் பதவி தமிழர்களிடமிருந்து கைநழுவிப் போய்விட்டது. இருந்தும் எமது திட்டமிடப்படாத சிந்தனையின் காரணமாக ஒரு தமிழ் அமைச்சர் கூட கிழக்கு மாகாண சபையில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தனித் தமிழ் தொகுதியாகவுள்ள பட்டிருப்புத் தொகுதியிலேயே எனது சேவைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்தத் தொகுதியை நாங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு வளர்த்தெடுத்தால் கிழக்கு மாகாணத்தையே நாம் ஆளலாம்.
தற்போது நாங்கள் அரசாங்கத்திலிருப்பது பொற்காலமாகும். ஏனெனில் பாரிய நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். பிரதேச செயலகங்கள் தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment