தனிநாட்டுக் கோரிக்கையை நாம் எதிர்த்திருக்காவிட்டால் தமிழ் ஈழம் உருவாகியிருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசனலி தெரிவித்துள்ள கூற்று கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான மனித உயிர்களை பறிகொடுத்தும் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து மனக் காயங்களுடன் வாழும் தமிழ் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாய் உள்ளது என ரெலோ அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் செயலாளர் ஹென்றி மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹசனலி எம். பி. யின் கூற்று தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இப்படிப்பட்ட கருத்துக்களை இந்த காலகட்டங்களில் ஹசனலி எம்.பி.யும் அவரது கட்சியினரும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களுடைய உரிமையை சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலத்தை முறையாக பிரயோகிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து பேசவிருக்கும் கால கட்டத்தில் ஹசனலி எம். பி.யின் கருத்து உகந்ததாக அமையவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் போது வடக்கு - கிழக்கு இணைப்பு கிழக்கு மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்படும் விவகாரம் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் கல்முனை மாநகர சபை தமிழ் மக்களை புறக்கணிக்கும் விடயம் கல்முனை முச்சக்கர வண்டி சாரதிகளின் விடயம் என்பனவும் பேசப்படும் என்றார்.

Post a Comment