கடத்தப்பட்ட தமிழ் முஸ்லிம் மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Friday, October 10, 20140 comments



தெஹிவளையில் வைத்து 2008 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று தெஹிவளையில் வைத்து மூன்று தமிழ் மாணவர்களும்  அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களுமே கடத்தப்பட்டனர்.

இந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளின் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி  தவராசா ஆஜராகினார்.

இதேவேளை, மன்றில் குழுமியிருந்த ஐந்து மாணவர்களின் பெற்றோர்களும் எமது பிள்ளைகளை எங்களுக்குக் காட்டுங்கள் என கதறியழுது மன்றாடினர்.

தாங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கு மேல்  பொலிஸ் நிலையங்களும் நீதிமன்றங்களுமாக தங்களுடைய பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலைவதாகவும் தங்களுடைய பிள்ளைகளை எப்படியாவது தங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என  நீதிபதியிடம் மன்றாடினர்.

மனுதாரர்களின் குறைகளையும் வேதனைகளையும் மிக அவதானமாகக் கேட்டு ஆறுதல் கூறிய  நீதிபதி, வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி விரைவாக முடிவிற்கு கொண்டுவர   விசாரணைகள் நடாத்திய  குற்றபுலனாய்வுத்துறை பொலிஸ் சாட்சிகளிகள், நீதிமன்றிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதை வலியுறுத்தினார்.

2008ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வருபவருமான   எம்.ஏ ஜயதிலகவின் சாட்சியத்தை மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய   சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி;  தவராசா நெறிப்படுத்தினார்.

அவர், தனது சாட்சியத்தில்...

முன்னாள் கடற்படைக் தளபதி வசந்த கரன்னாகொடையின் முறைப்பாட்டில் விசாரணை நடாத்தி கோட்டை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் b732/09ஆம் இலக்க வழக்கின் சந்தேக நபரான  கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் முனசிங்க ஆராச்சிகே  தொன் நிலாந்த சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட  அறையிலிருந்து 7.62x25 துப்பாக்கி ரவைகள்-300, 7.62mm  வெடி குண்டுகள் 105, 9x18 வெடி குண்டுகள் 32,  9mm  ரக  வெடிகுண்டுகள் 50 மீட்கப்பட்டன.

அத்துடன்; கொமர்ஷல், சம்பத், மக்கள், தேசிய சேமிப்பு, எச்.எஸ்.பி.சி மற்றும் இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள், காசோலைகள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள். கடவுச்சீட்டுக்கள். சோனி எரிக்சன், சிம்அட்டைகள், உட்பட 21 தடயப் பொருட்களை கைப்பற்றியதாக சாட்சியமளித்தார்.

மேலும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி முன்னாள் கடற்படைக் தளபதியும் தற்பொழுது ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவருமான் வசந்த கரன்னாகொடை கடற்படையில் லெப்டினன்ட் கொமாண்டர் கடமையாற்றிய  முனசிங்க ஆராச்சிகே  தொன் நிலாந்த சம்பத் முனசிங்க என்பவருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டை  பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிற்கு விசாரணை செய்ய வழங்கிய உத்தரவுக்கு அமைய  இந்த விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு  மேற்கொண்டதாகவும் சாட்சிமளித்தார்.

சந்தேக நபரான கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவை கைது செய்வதற்காக கோட்டையில் அமைந்திருக்கும் கடற்படை தலைமையகத்துக்கு சென்றதாகவும் ஆனால்,  சம்பத் முனசிங்க தலைமறைவானதால்  கைது செய்ய முடியவில்லையெனவும் சாட்சியமளித்தார்.

சந்தே நபரான சம்பத் முனசிங்க நாட்டைவிட்டுத் தப்பிச்செல்ல முயற்சிப்பதாக தமக்குக் கிடைத்த தகவலையடுத்து கொழும்புக் கோட்டை நீதிமன்றில் விசாரணைகளின் முதல் அறிக்கையை 2009ஆம். ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி தாக்கல் செய்தேன்.

சந்தேகநபர் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்இ குற்றப் புலனாய்வுப்பிரிவின் அத்தியட்சகர் ஆகியோருக்கு சந்தேக நபரைப் பற்றிய தகவல் வழங்க நீதிமன்றின் உத்தரவைப் பெற்றதாகவும் சாட்சியமளித்தார் .

விசாரணைகளின் மேலதிக அறிக்கையை 2009ஆம். ஆண்டு ஆனி மாதம் மூன்றாம் திகதி தாக்கல் செய்ததாகவும்; பின்னர் 2009ஆம் ஆண்டு ஆனிமாதம் 6ஆம். திகதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்;கமைய மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

ராஜீவ் நாகநாதனின் தாயார் சாட்சியம்

இந்த விசாரணையில் கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோரின் சாட்சியம்  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய முன்னிலையில் நடைபெற்றபோது சாட்சியமளித்த சாட்சிகளில்,

கடத்தப்பட்ட மாணவர்களின் ஒருவரான ராஜீவ் நாகநாதனின் தாயா¬ரான சரோஜா நாகநாதனின் சாட்சியமளிக்கையில், எனது ஒரே மகனையும் ஏனைய நால்வரையும் கடற்படையினரே கடத்திச்சென்றனர். இதனை எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார்.

எனது மகன் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவண்ணமிருந்தார்.

தன்னையும் தனது நண்பர்களையும் கடற்படைப் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த  முனசிங்கவும், ஹெட்டியாராச்சி உட்பட கடற்படையை சேர்ந்த நால்வரே தங்களைக் கடத்தியதாகவும் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் எனது மகன் தொலைபேசியில் என்னிடமும் தனது தந்தையிடமும்  தெரிவித்திருந்தார்.

அண்ணாச்சி என்றழைக்கப்படும் சமந்த மற்றும் மொஹமட் அலி என்பவர்கள் எனது கணவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,    கடற்படையினரே எனது மகனையும் மற்றைய நான்கு இளைஞர்களையும்  கடத்தியுள்ளதாகவும் எனது மகனையும் மற்றைய இளைஞர்களையும் தங்களால் விடுவிக்க முடியும் என்றும் அதற்காக  ஒரு கோடி ரூபாய் பணம் தருமாறும் கோரினர்  என சாட்சியமளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை நவம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றில ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham