'முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள வேண்டிய தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சரணாகதி அரசியல் தேவையில்லை. எமது தீர்மானங்கள் மசூராவின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதில் தலைமைத்துவம் மிகத் தெளிவாக இருக்கின்றது. அவசரப்பட வேண்டிய தேவை எமக்கில்லை' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் சாணக்கியமான இறுதித் தீர்மானங்கள் நிச்சயம் சமூகத்தின் நிலைப்பாடாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (23) மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு பாதுகாப்புக் கவசம் முஸ்லிம்களுடைய தனித்துவமன அரசியலாகும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
முஸ்லிம் காங்கிரஸானது நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சிக்குள் எதிர்க்கட்சியாக இயங்குகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்பது மிகப்பெரும் தலையிடி என ஜனாதிபதி நினைத்தால் அதில் எந்தத் தவறும் இல்லை. என்னுடைய இயக்கத்தின் தார்மீக பொறுப்பு அதுவாகும்.
மறைந்த தலைவர் அஷ்ரப், பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கிவிட்டு அவர் எதிர்க்கட்சியில் இருந்தார். ஆனால், அவர் பிரேமதாஸவின் நண்பராகயிருந்தார். இப்போதைய தலைவர் தற்போதைய ஜனாதிபதியின் எதிரியாகயிருக்கின்றார். இப்படியான காலகட்டத்தில் வாழ்த்துகொண்டிருக்கின்றோரம்.
முஸ்லிம் காங்கிரஸை பற்றி அவதூறுகளையம் தேவையற்ற கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடுகின்றனர்கள். இதில் எவ்வித உண்மையும் இல்லை. கட்சியின் தலைமைத்துவம் தடுமாற்றத்துக்;குள் அகப்பட்டுக் கொள்ளாமல் நேர்மையாக நடந்துகொள்ளும். கட்சி மட்டத்திலும் சிவில் மட்டத்திலும் கலந்துரையாடல்களை நடாத்தி தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும்.
முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் எவருடனும் எந்நத் தரப்பிடனும் பேச்சுவார்த்தைக்கும் போகவில்லை.
1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, மறைந்த தலைவர் அஷ்ரப் பிரேமதாஸவை எவ்வாறு மறைமுகமாக ஆதரித்தாரோ அதுபோன்றுதான் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலையும் தீர்மானிக்க வேண்டும்.
எனவே, கட்சியையும் சமூகத்தையும் பாதுகாப்பது என்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் தீர்க்கமான முடிவாகும். அதனை எப்படி செய்வது என்பது பரந்துபட்ட மசூரா அடிப்படையில் மிக நிதானமாக, நேர்மையாக சுயநலம் மறந்து நாங்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு எந்த தியாகத்தையும் செய்ய தயராக இருக்க வேண்டும்' என்றார்.

Post a Comment