பங்களாதேஷ் விடுதலைப் போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக குற்றம் சாட்டி பங்களாதேஷ் முக்கிய அரசியல் இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹுசைன் ஸைதிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (17/9) தீர்ப்பளித்தது.
பங்களாதேஷ், பாகிஸ்தானிலிருந்து பிரிவதை விரும்பாத ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி, 1971 ஆம் நிகழ்ந்த விடுதலைப் போராட்டத்தின்போது “பாகிஸ்தான் ஜுன்டா’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்த ஷேக் ஹஸீனாவால் நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சர்வதேச குற்றவியல் குழு, ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவரான ஹுசைன் ஸைதிக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை விதித்தது.
படுகொலை, பாலியல் பலாத்காரம், தீவைத்தல், கொள்ளை, ஹிந்துகளை கட்டாயமாக மதம் மாற்றியது உள்ளிட்ட ஆறு முக்கிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இக்குற்றச் சாட்டுகளை ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் மறுத்துள்ளது.
இந்நிலையில், ஹுசைன் ஸைதியின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
ஸைதி, தனது ஆயுள்காலம் முழுவதையும் சிறையில் கழிக்க வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment