பாகிஸ்தானியரைத் திருப்பி அனுப்படுவதற்கு எதிரான மனு ஒத்திவைப்பு
Monday, September 29, 20140 comments
இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானியரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை இலங்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அரச தரப்பு சட்டத்தரணி சமர்ப்பித்த ஆட்சேபனைகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக மனுதாரக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷான் டயஸ் தெரிவித்தார்.
நிலம்கா பெர்னாண்டோ உட்பட இலங்கையில் செயற்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
மனுதார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கருத்துக்களை தெரிவித்தபோது, இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
எனவே அவர்களை நாடு கடத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆயினும் இந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பு சட்டத்தரணி, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்ப்பான சாசனத்தில் கையொப்பம் இடாத நிலையில், இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரும் நபர்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாதென்று அறிவித்தார்.
இந்த நபர்கள் தகுந்த விசா அனுமதி பத்திரமின்றி இலங்கையில் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதற்கு சட்டத்தின் கீழ் எந்த விதமான தடைகளும் இல்லை என்றும் அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.
இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொண்ட நிதிமன்றம் பாகிஸ்தான் நாட்டைசேர்ந்தவர்களை நாடு கடத்தும் தீர்மானம் அரசாங்கத்தின் ஒரு கொள்கை ரீதியான முடிவென்று தெரிவித்தது.
எனவே இவ்வாறான கொள்கை முடிவுகளை தடைசெய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இல்லை என்றும் நிதிபதிகள் அறிவித்தனர்.
இதன்படி சம்பந்தபட்ட மனுவை தள்ளுப்படி செய்வதாக நிதிபதிகள் அறிவித்தனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment