வெற்றிலைக்கு வாக்களிப்பதும், இரட்டை இலைக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - கி.மா.ச.உ. இம்ரான் மஹ்ரூப்
Tuesday, September 9, 20140 comments
முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைக்கு வாக்களிப்பதும். முஸ்லிம் காங்கிரஸ் கூட்டான இரட்டை இலைக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். ஓன்று இஞ்சி என்றால் மற்றையது மிளகு என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை வெலிமடையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திர சமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை முஸ்லிம்களின் நிம்மதியைக் குலைத்த ஒரு அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் விளங்குகின்றது. முஸ்லிம்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் தனக்குத் தேவையான பல சட்டங்களை நிறைவேற்றியது. அதன் மூலம் பல வசதிகளை அனுபவித்த வருகின்றது.
எனினும். அவற்றையெல்லாம் விரைவில் மறந்து நன்றி கெட்ட தனமாக முஸ்லிம்களுடன் இந்த அரசு நடந்து வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக பல பள்ளிவாசல்கள் தாக்கப் பட்டன. இவற்றோடு சம்பந்தப்பட்ட யாராவது கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா? இல்லை.
ஹலாலான உணவுகளை அடையாளப் படுத்துவதில் பிரச்சினை, முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாத பிரச்சினை, அலுவலகங்களில் முஸ்லிம் அதிகாரிகளை நியமிப்பதில் பிரச்சினை, முஸ்லிம்களின் காணிகளில் மீள் குடியேற முடியாத பிரச்சினை, முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் நிலைமை, முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்து பொருளாதாரத்தை முடக்க எத்தனிக்கின்றமை என முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை இந்த அரசாங்கம் உருவாக்கி வருகின்றது.
எனவே. தொடர்ந்து எங்களுக்கு அநியாயம் செய்து வருகின்ற ஒரு அரசாங்கத்திற்கு நாம் வாக்களிக்கலாமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். ஜனாதிபதிக்கு ஊவா முஸ்லிம்கள் மீது இப்போது திடீர் அக்கறை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி ஆராய குழு நியமித்துள்ளாராம் அவர் ஜனாதிபதியாக 10 வருடங்கள் இருக்கின்றார். இவ்வளவு காலம் வராத அக்கறை இப்போது ஏன் அவருக்கு வர வேண்டும். எல்லாம் தேர்தல் கால ஏமாற்று வேலை. தேர்தல் முடிந்தால் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கும் இவர்களது சுயரூபம் வெளிப்பட்டு விடும்.
எனவே, உண்மையாக நாட்டு நடப்புகளை ஆராய்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் வெற்றிலைக்கு வாக்களிக்க மாட்டார். இதுவே யதார்த்தம். வேற்றிலை எப்படி முஸ்லிம் விரோதக் கட்சியோ அப்படித்தான் இரட்டை இலையும். இரட்டை இலைக்காரர்கள் அரசாங்கத்தோடு ஒட்டியிருந்து சுகபோகங்களை அனுவித்து வருகின்றனர். எனினும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காவது இவர்களால் உருப்படிhன தீர்வு காண முடிந்நதா? அநியாயக்கார அரசோடு ஒட்டியிருந்து அதற்கு ஆதரவு கொடுக்கின்ற இவர்களும் அநியாயக்காரர்களாகவே பார்க்கப்பட வேண்டும். தனித்துப் போட்டியிட்டு இவர்கள் ஆசனங்கள் ஏதாவது பெற்றால் நிச்சயமாக அரசோடு ஒட்டப்போகின்றார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை
இந்த நிலையில் அரசாங்கத்தின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிப்பதும், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டான இரட்டை இலைக்கு வாக்களிப்பதும் ஒன்று தான். ஒன்று இஞ்சி என்றால் மற்றையது மிளகு. இதன்டி இரண்டும் உறைப்புத்தான்
எனவே இந்த இரண்டு உறைப்புக்களையும் நாம் ஒதுக்கி விட வேண்டும். நமக்கு நிம்மதி தருகின்ற கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அது நமக்கு பழக்கப்பட்ட கட்சி நமது பாட்டன் பூட்டன் காலக்கட்சி என்பதை நினைவில் இருத்தி செயற்பட வேண்டும் என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment