எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?
Sunday, September 7, 20140 comments
இன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்? அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, 'சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.'
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது? எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது? எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் 'தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்' என்று கூற மீண்டும் நான் 'அதற்கு பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்' எனக் கூற மீண்டும் நான் 'அதற்குப் பிறகு என்ன? என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதாகும்' என நவின்றார்கள்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே ஒரு மனிதர் ஆஜராகி 'நான் ஜிஹாதில் பங்கு கொள்வதற்காக வேண்டி உங்களிடத்தில் அனுமதி தேடுகிறேன்' எனக் கூறினார். அதற்கு நாயகமவர்கள் 'உம் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா? என வினவியதற்கு 'ஆம்! உயிருடன் இருக்கின்றனர்' என அம்மனிதர் பதிலளித்தார். 'அவர்களுக்கு கித்மத் செய்வதைக் காட்டிலும் ஜிஹாதுடைய நன்மை குறைவுதான்' என திருவாய் மலர்ந்தருளினார்கள்.''
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார், நான் ஹிஜ்ரத் செய்யும் நாட்டம் கொண்டு வந்துள்ளேன். நான் வரும்போது என் தாய் தந்தையரை அழும் நிலையில் விட்டு விட்டு வந்தேன்' எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உடனே நீர் திரும்பி செல்வீராக! அவர்கள் இருவரையும் எப்படி நீர் அழ வைத்தீரோ அந்த விதம் சிரிக்க வைக்க வேண்டும்'
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அறிவிக்கிறார்கள்; ''எந்த மனிதன் தன் இரணம் அபிவிருத்தி அடையவும் இன்னும் ஆயுள் நீடிக்கவும் இன்னும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறானோ அவன் விருந்தினர்களை சங்கை செய்யவும் இன்னும் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடக்கவும்.''
ஹஜ்ரத் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றோர்களுக்கு அடிபணிகிரவர்களை பார்த்து இச்சொற்களை கூறினார்கள்.. 'பெற்றோர்களுக்கு அடிபணிபவர்கள் மீது பரக்கத் உண்டாவதாக! அல்லாஹு தஆலா அவருடைய ஆயுளை நீடிக்க செய்வானாக!''
உங்கள் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும் உமக்கு முன்பாக அவர்கள் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ வயோதிகத்தை அடைந்து விட்டால் (அவர்களின் இயலாமையை, பலஹீனத்தை நினைத்து) எப்பொழுதும் 'சீ' என்று கூறாதீர்கள் இன்னும் அவர்களிருவரையும் விரட்டாதீர்கள், இன்னும் அவர்களுடன் மிருதுவாகவும் அன்பாகவும் எப்பொழுதும் பேசுங்கள்.
ஹஜ்ரத் மாலிக் இப்னு ரபியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ''யா ரசூலல்லாஹ்! தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு 'ஆம்' என்று சொன்னார்கள். மேலும், ''தொழ வேண்டும். தாய் தந்தையருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவர்கள் யாரிடமேனும் ஏதேனும் வாக்கு கொடுத்திருந்தால் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு யார், யார் உறவினர்கள் இருந்தார்களோ அவர்களுடன் நல்லபடி நடக்க வேண்டும். தாய் தந்தையர் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கண்ணியம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் தாய், தந்தையர் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அடங்கி உள்ளது.'' (ஆதாரம்: அபூதாவூது)
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், பெற்றோர்களுக்கு என்ன செய்வது? அவர்கள் இறந்த பிறகு என்ன கடமைகள் உள்ளது? என்று அறியாதவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
இன்று பிள்ளைகள் எந்த அளவுக்கு பெற்றோர்களுக்கு மரியாதையும், கண்ணியமும், கனிவான சொற்கள் தருகிறார்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு பயந்தக் காலம் போய்விட்டது. இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்படுகிறார்கள். எத்தனை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுக்காக துஆச் செய்கிறது? கடமைக்காகவும், சடங்குக்காகவும் தான் செய்கிறார்கள் ஒழிய உண்மையான பாசத்திற்காக அல்ல. பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்க்க வரமாட்டார்கள். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு ஓடி வருவார்கள்.
எதற்க்காக? இந்த நடிப்பு? யாருக்காக இந்த பற்று? ஊரு மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பெற்றோர்களை கதற வைக்கும் சில பிள்ளைகள். கண்ணீரில் முழுக வைக்கும் சில பிள்ளைகள். மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றோர்களை மன வேதைனைச் செய்யும் சில பிள்ளைகள். அவர்களும் ஒரு நாள் பெற்றோர்கள் நிலைக்கு வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லையா? அல்லது புரியவில்லையா? இன்று பெற்றோர்களின் நிலைமை ரொம்ப மோசமாக தான் போய்கொண்டு இருக்கிறது.
சில வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கார்களைப் போன்று நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அல்லாஹ்விடம் யாரும் தப்பிக்க முடியாது . அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலமாக தான் சுவனத்தைப் பெற முடியும் என்று தெரிந்தே நாம் அலச்சியமாக இருக்கிறோம்.
அல்லாஹ் மிக அறிந்தவன் .
Post a Comment