ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு அக்கறையில்லை - லாபிர் ஹாஜியார்
Sunday, September 7, 20140 comments
மலையக பெருந்தேட்ட தமிழ்மொழி பாடசாலைகளுக்கு ஆசரியர் நியமனம் தொடர்பில் தமிழ் தலைவர்கள் அக்கறை காட்டியது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு எவ்விதமான அக்கறையையும் காட்டவிலை. இதனால் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பு ஏற்படும் என மத்தியமாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன் (லாபிர் ஹாஜியார்) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தினால் எதிர்கால தமிழ் சமூகம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணார்ந்த மலையக தமிழ் தலைமைகள் போராடி அவ்வெற்றிடங்களை நிரப்ப புதிய நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுத்தது. அதேபோன்று கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், களுத்துறை, மாத்தளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, நுவரொலியா உள்ளிட்ட மலையக பகுதிகளிலிலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடங்கும். ஆனபோதிலும் மலையக பெருந்தோட்டப்புற தமிழ் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்காகவே தற்போது ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் இதன்போது உள்ளடக்கப்படாது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டடுள்ளது.
இவ்விவகாரத்தில் நாம் தமிழ் தலைவர்களை குறைகூற முடியாது. ஏனெனில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினையை இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் கண்டி மவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் இருக்கின்றார். அவர் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவ்விடயத்தில் அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. அத்தோடு கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளு மன்றம் சென்ற மற்றும் இரு முஸ்லிம்கள் பிரதி அமைச்சர்களாக இருக்கின்றனர். அவர்களும் இவ்விடயத்தில் அக்கறைகொள்ளவில்லை.
அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சி ஊடாகவே கண்டி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். பின்னர் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்பட்ட ஹக்கீம் அரசுடன் இணைந்து சமூகத்தை காட்டிக்கொடுத்தார். இந்நிலையில் இன்று கண்டி பல வகையிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அமைச்சர் ஹக்கீம் தனது தலைமைப்பதவியை பாதுகாப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றார். அத்தோடு பிரதியமைச்சர் காதரும் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளின் மூலமே பாராளுமன்றம் சென்றார். இப்போது அரசுடன் இணைந்து பிரதியமைச்சராக இருக்கின்ற அவர், ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டாது, தான் ஜனாதிபதிக்கு விசுவாசமானவர் என்பதை காட்ட அரசுடன் இணைந்து ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவுமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இதேவேளை 2007 ஆம் ஆண்டு மலையகத்தில் 2500 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கும் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொடுக்க உதவிய பைஸர் முஸ்தபா மத்திய கொழும்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டதையடுத்து கண்டி மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு தெரிவானதை மறந்துவிட்டார்.
நிலைமை இப்படியிருக்கின்றபோது இன்று முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. மலையகம் சார்ந்த பிரதேசங்களிலுள்ள புத்திஜீவிகளும் கல்விமான்களும் தணவந்தர்களும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசர நிலையில் தாம் உள்ளோம் என்றார்.
Post a Comment