அரசாங்கம் தனது கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், ஆளும் கட்சிக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை விலக்கிக்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலில் கட்சி அடைந்த தோல்வி மற்றும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காத தன்மை ஆகியனவற்றின் காரணமாக இவ்வாறான ஓர் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை விட்டு விலகுமாறு கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தலைவரிடம் கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதா அல்லது வேறும் தீர்மானங்களை எடுப்பதா என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மாற்ற வேண்டுமென மக்கள் கோருவதாகவும், இந்த அரசாங்கத்தை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரையில் அரசாங்கம் காத்திரமான பதில் எதனையும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment