ஹிஜாப் அணியத்தடை: கூடைபந்தாட்ட அணி வெளியேற்றம்!
Sunday, September 28, 20140 comments
தலையில் முக்காடு அணிந்து விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால், ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து கட்டார்ர் பெண்கள் கூடைப்பந்து அணி வெளியேறியது.
தென்கொரியாவிலுள்ள இன்சியான் நகரில் 17 ஆவது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கட்டாரிலிருந்து சுமார் 55 பெண் விளையாட்டு வீரர்கள் உட்பட்ட அணிகளும் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், மங்கோலியா மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விளையாட களமிறங்கிய கட்டார் அணியிலுள்ள பெண்களில் பலர் தலையில் ஹிஜாப் அணிந்திருந்தனர். இவ்வாறு தலையில் ஹிஜாப் அணிந்து விளையாட சர்வதேச கூடைப்பந்து கழக(FIBA) சட்டத்தில் அனுமதி இல்லை என்றுகூறி கட்டார் அணி விளையாட நடுவர்கள் அனுமதி மறுத்தனர்.
தலையில் ஹிஜாபின்றி இறங்கினால் மட்டுமே போட்டி நடத்த அனுமதிப்போம் என நடுவர்கள் கூறியதைத் தொடர்ந்து கட்டார் அணியினருக்கும் நடுவர்களுக்குமிடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இறுதியில், விளையாட்டுக்காக தங்கள் மத அடையாளங்களை இழக்க முடியாது எனக்கூறி கட்டார் பெண்கள் அணி மைதானத்திலிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து போட்டியின்றி மங்கோலியா அணி வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.
சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது, தலையில் அலங்காரங்கள் மற்றும் ஆபரணங்கள் அணிய தடை உண்டு. அதே சமயம், தலையினை மறைத்துக்கொள்வதற்குத் தடை இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான சட்டங்கள் அநியாயமானவை என கட்டார் பெண்கள் விளையாட்டு அமைப்பு தலைவர் அஹ்லம் ஸாலம் அல் மனா பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
"முஸ்லிம் நாடுகளிலுள்ள பெண்கள் எல்லா விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கு கொள்ள தயாராக இருப்பதை உலகுக்கு அறிவிப்பதற்காகவே களமிறங்கினோம். சர்வதேச கூடைப்பந்து போட்டியில் தலையில் அலங்காரங்கள் இருக்கக்கூடாது என்ற சட்டம் இருப்பது தெரியும். இதனைக் காரணம்காட்டி எங்களை விளையாட அனுமதிக்கமாட்டார்கள் என்பதும் தெரியும். என்றாலும் விளையாடுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்பதும் எங்களைச் சர்வதேச கூடைப்பந்து கழகமே விளையாடுவதற்குத் தடுக்கிறது என்பதை உலக மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே மைதானத்தில் இறங்கினோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment