சர்ச்சையை கிளப்பிய வில்பத்து காணி விவகாரம்: விஷேட சந்திப்பு
Sunday, September 21, 20140 comments
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார்- மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு முஸ்லிம் மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விஷேட சந்திப்பு ஒன்று நேற்று (20) மாலை இடம்பெற்றது.
புத்தளம், வேப்பமடு பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர்அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் (இஸ்லாஹி), வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) ஆகியோருடன் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த கிராம நிறுவாகிகளும் கலந்துகொண்டனர்.
வடக்கு முஸ்லிம் மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளில் மேற்படி மரைக்கார்தீவு முஸ்லின் மக்களின் காணி விவகாரமும் ஒன்றாகும். இது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்மக்கள் குடியேறுவதற்கான வாய்ப்பினை இழந்திருக்கின்றனர். அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் வாக்களிக்கப்பட்டதன்படி இம்மக்களுக்கு இதுவரையில் அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) அவர்களால் கொண்டு செல்லப்பட்ட பிரேரணை வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய குறித்த பிரச்சினைகளின் தீர்வு தொடர்பான ஆராய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாகவே மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பல முக்கியவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அது தொடர்பில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தயாராகி வருவதாகவும் அதன் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் MR.நஜா முஹம்மத் (இஸ்லாஹி) தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment