முஸ்லிம் அமைச்சர்களின் பருப்பு ஊவாவில் வேகவில்லை!
Sunday, September 21, 20140 comments
இனவாதத்தின் மூலம் தமது அரசியலை முன்னெடுக்கலாம் என எதிர்பார்த்த அரசுக்கும், அரசுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டே அரசுக்கெதிராக பேசுவோர் போன்று நாடகமாடி முஸ்லிம்களை ஏமாற்றலாம் என நினைத்த முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஊவா மக்கள் சிறந்த பாடத்தை கற்றுத்தந்துள்ளார்கள் என உலமா கட்சித்தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
ஊவா தேர்தல் பற்றிய ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது
ஊவா மாகாண தேர்தல் முடிவு என்பது இனவாத அரசை வீட்டுக்கனுப்புவதற்கான தெளிவான ஆரம்பமாக இருப்பதுடன் முஸ்லிம்களை, ஏமாற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளை ஊவா முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்தமையையும் நமக்கு காட்டுகிறது.
சிங்கள பௌத்த இனவாதத்தை உருவாக்கி அதன் மூலம் சிங்கள மக்களை தம் பக்கம் இழுத்து தேர்தல்களில் வெல்லலாம் என கனவு கண்டு பள்ளிவாயல்கள் உடைப்புக்கு துணை போகும் அரசாங்கத்தின் பாரிய பின்னடைவு என்பது சிங்கள மக்களை இப்படியான இனவாத செயற்பாடுகளால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை காட்டியுள்ளது.
அத்துடன் சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையும் இத்தேர்தல் முடிவு தெளிவாக காட்டியுள்ளது.
அதே போல் பள்ளிவாயல்களை உடைத்துக்கொண்டிருக்கும் அரசுக்கு நாடாளுமன்றத்தில் முழு ஆதரவையும் கொடுத்துக்கொண்டு, தாம் சமூகப்பற்றுள்வர்கள் போன்று முஸ்லிம் சமூகத்துள் வந்து அரசுக்கெதிராக அறிக்கை விட்டு நாடகமாடி வரும் முஸ்லிம் அமைச்சர்களின் பருப்பு ஊவாவில் வேகவில்லை.
தாம் தனித்து நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸ், கொஞ்சமாவது சமூகப்பற்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் இத்தகைய ஏமாற்றுக்கு துணையாக அழைத்து கடைசியில் இருவருமே குப்பற வீழ்ந்துள்ளனர்.
அரசில் அமைச்சர்களாக இருந்து கொண்டே அரசுக்கெதிராக பேசினால் அதற்கு ஏமாற நாம் ஒன்றும் வடக்கு, கிழக்கு, மேல் மாகாண முஸ்லிம்கள் அல்ல என்பதை ஊவா மாகாண முஸ்லிம்கள் மிகத்தெளிவாக பறை சாற்றியுள்ளார்கள்.
இந்த முஸ்லிம் அமைச்சர்கள் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இந்த சாத்தான் கூட்டை நிராகரிக்க வேண்டும் என ஊவா மாகாண முஸ்லிம்களை பகிரங்கமாக கேட்டுக்கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும்.
அந்த வகையில் உலமா கட்சி அம்மக்களுக்கு நன்றி சொல்வதுடன் உலமா கட்சியின் தன்னலமற்ற அரசியல் வழிகாட்டலுக்குக்கிடைத்த பெருவெற்றியாகவும் இதனை நாம் பார்க்கிறோம்.
பதுளை மாவட்டத்தின் கல்வி கற்றவர்கள் கூட யதார்த்தத்தை உணராமல் அரசடன் இணைந்து நாடகமாடும் அமைச்சர்களை துணைக்கழைத்து முஸ்லிம்களை ஏமாற்ற முணைந்தது பாரிய குற்றமாகும்.
அவர்கள் இந்த அமைச்சர்கள் துணையின்றி சுயேற்சையாக களமிறங்கியிருந்தால் தோற்றாலும் தமது சுய கௌரவத்தை காப்பாற்றியிருக்க முடியும்.
மாறாக அமைச்சர்களும், கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு பிழைத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மக்களை ஏமாற்றி மாநகர சபையை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கூட்டம், மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெளிவாக தெரிந்தும் சுயநலத்துக்காக இவர்களுடன் ஒட்டியிருக்கும் உலமாக்கள் மற்றும் இந்தக் கட்சிகளின் எம்பீக்கள் என ஒரு பெரும் கூட்டமே ஊவாவுக்கு படையெடுத்தும் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் பதுளை மாவட்டத்தில் ஒரு ஆசனம் கூட கிடைக்கப்பெறவில்லை என்பது ஊவா முஸ்லிம்களின் பணத்துக்கும், பகட்டுக்கும், ஏமாற்று வித்தைகளுக்கும் சோரம் போகாத அரசியல் விழிப்புணர்வை காட்டுகிறது.
இதனை ஏனைய மாகாண முஸ்லிம்களும் ஒரு பாடமாக பெற்று அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ். மற்றும் அ. இ. மக்கள் காங்கிரஸ், மௌனத்துக்கு பெயர் போன அதாவுல்லா காங்கிரஸ் போன்ற சுநல ஏமாற்றுக் கட்சிகளை நிராகரித்து முஸ்லிம்களுக்கு தெளிவான அரசியல் சிந்தனையை ஊட்டி வரும், உலமா கட்சியின் வழி காட்டலை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என முபாரக் மௌலவி தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment