ஊவா தேர்தலில் முஸ்லிம்களின் தெரிவு என்ன?
Friday, September 12, 20140 comments
ஊவா மாகாணசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது ஈடுபாட்டினையும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது, இந்நிலையில் இத்தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் தேவை என்ன? அவர்கள் எதனை இலக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை மக்களுக்கு தெளிவு படுத்துவது எமது கடப்பாடாக அமைந்திருக்கின்றது.
வளர்ந்துவரும் முன்மாதரிமிக்க தேசிய அரசியல் கட்சி என்றவகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊவா மாகாணசபைத் தேர்தலில் தன்னுடைய ஈடுபாட்டினையும், பங்களிப்பினையயும் மேற்கொள்வதற்கு முன் கூட்டியே தீர்மானித்திருந்தது.
இதற்கமைய தேர்தல் அறிவிப்புகளுக்கு முன்னர் ஊவா மாகாணத்தின் நிலைமைகளை கண்டறிவதற்கும் குறிப்பாக ஊவா மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அரசியல் ரீதியான சவால்கள் எத்தகையது என கண்டறிவதற்கும் மூன்று முக்கிய கள விஜயங்களை நாம் மேற்கொண்டோம்.
பதுளை மாவட்டத்தின் புத்திஜீவிகள், அரசியல் முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தவர்கள். இளைஞர்கள், பெண்கள் என சகல தரப்பினரோடும் கலந்துரையாடி நிலமைகளை அறிந்துகொண்டோம். அவர்கள் பின்வரும் மூன்று விடயங்களை தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக முன்வைத்திருந்தனர்.
* அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளினால் குறிப்பாக பொதுபலசேனாவினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள்
* முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர் கொண்டு அவற்றை உரிய முறையில் கையாளுவதற்கு ஏற்ற அரசியல் பிரதிநிதித்துவம் காணப்படாமை
* கல்வி, வேலைவாய்ப்புகள், அபிவிருத்தித் திட்டங்களின்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுதல்
இதற்கு என்ன தீர்வு என நாம் அவர்களிடம் வினவியபோது, “முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எமது மக்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பெரும்பான்மை அரசியல் கட்சிகள் அதிகமான முஸ்லிம்களை களத்தில் இறக்கிவிடுகின்றார்கள் இதனால் வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன இறுதியில் நாம் எமது பிரதிநிதித் துவங்களை இழக்கின்றோம். எனவே நாம் பிரதிநிதித்துவங்களை இழக்காது எமது பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அதே வேளை தற்போது நிலவும் இனவாத சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாம் அரசியல் ரீதியாக தனிமை பட்டுவிடாமல் இன நல்லிணக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் எமது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்” என மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
இது விடயமாக நாம் ஊவா மாகாணத்திற்கு வெளியில் இருக்கின்ற புத்திஜீவிகள் அரசியல் ஆர்வலர்கள், உலமாக்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய வழிகாட்டல்களையும் கோரினோம். இதன் பயனாக இரண்டு முக்கிய விடயங்களை ஊவாவில் முஸ்லிம்களின் தேர்தல்கால இலக்குகளாக கொள்ளமுடியும் என நாம் தீர்மானித்தோம்.
இன நல்லிணக்கத்தை உறுதி செய்தல், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் ஆகிய இரண்டுமே அத்தகைய முக்கிய இலக்குகளாகும். எனவே இதனை அடைந்துகொள்வதற்கான வழிவமுறைகள் குறித்து நாம் ஆராய்ந்தோம். இந்த சந்தர்ப்பத்தில்தான் எல்லா முஸ்லிம் கட்சிகளும் கூட்டாக தனித்து ஒரே சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற ஆலோசனையும் இன்னுமொரு தரப்பினரால் முன்மொழியப்பட்டது. இதனையும் நாம் ஒரு முக்கிய விடயமாக கருத்தில்கொண்டு ஆய்வுசெய்தோம்.
தனியான ஒரு குழுவாக பதுளை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம்களும் தேர்தலில் களமிறங்குவது இப்போதைய இனமுரண்பாட்டு நிலமைகளை மேலும் சிக்கல்வாய்ந்த ஒன்றாக மாற்றிவிடும். அது மாத்திரமல்ல பதுளை மாவட்டத்தில் முஸ்லிம்களை அது ஏனைய இனங்களில் இருந்தும் தனிமைப்படுத்திவிடும் என்பதை நாம் யதார்த்த பூர்வமாக அறிந்துகொண்டோம்.
எனவே இன நல்லிணக்கத்தை உறுதிசெய்யவும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவும் பொருத்தமான வேலைத்திட்டமொன்றினை நாம் ஆராய்ந்தோம். அத்தோடு ஏனைய கட்சிகள் இதற்கு பொருத்தமான நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனவா? என நாம் பொறுமையாக அவதானித்தோம். அந்த வகையில் தேர்தலில் களமிறங்கக் காத்திருந்த கட்சிகளின் நிலைப்பாடுகளையும் நாம் அறிந்துகொண்டோம்.
ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டமைப்பு குறித்து அதிக அளவில் பேசப்பட்டது, எல்லா அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்கள் போட்டிபோடாது அனைவரும் ஒரு சின்னத்தில் ஐக்கியப்பட்டு போட்டியிடுதல் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு அதனை நோக்கி ஆதரவுகளைத் திரட்டும் பணிகளும் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவு ஆரம்பம் முதல் இவ்விடயத்தில் தமக்கு உடன்பாடு கிடையாது என்ற கருத்தை வெளிப்படையாக முன்வைத்திருந்தது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் அங்கத்தவர்களிடமும் குறித்த கருத்துக்கு எவ்வித வரவேற்பும் காணப்படவில்லை. மத்திய மாகாணசபை உறுப்பினர் அஸாத் சாலி அவர்களும் குறித்த கருத்தோடு உடன்படுவதில்லை என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியாகிய எம்மிடமும் மேற்படி கூட்டணி குறித்து கலந்துரையாடப்பட்டது, அதன்போது நாம் மிகத்தெளிவாக சில விடயங்களை சுட்டிக்காட்டினோம். இன நல்லிணக்கத்தை உறுதி செய்தல், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் ஆகிய இரண்டு விடயங்களுமே இத்தேர்தலில் சமனான முக்கியத்துவம் பெறுகின்றன எனவே நாம் தேர்தலோடு மாத்திரம் முடிந்துவிடுகின்ற ஒரு வேலைத்திட்டத்தை எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்குப் பின்னரும் பிரயோகிக்கக்கூடிய மக்களுக்கு நன்மையளிக்கும் ஒரு வேலைத்திட்டத்தை எதிர்பார்க்கின்றோம், எனத் தெரிவித்தோம்.
அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கூட்டணியில் இணைவதா இல்லையா என்ற இரட்டை நிலைப்பாட்டில் இருந்தது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி நேரத்தில் அவை கைவிடப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியில் தமது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய முயற்சிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசும் மேற்கொண்டது. இருப்பினும் அதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஈற்றில் வேறு வழியில்லை என்ற நிலையில் ஆளும் தரப்பின் அனுசரணையுடனும் ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனும் ஆளும் தரப்பில் பங்காளிகளாக இருக்கின்ற இரண்டு கட்சிகள் இணைந்து தனியாகப் போட்டியிட முன்வந்தன. அதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு எனப் பெயரிடப்பட்டது. மேலும் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமை எனும் அடையாளமும் இடப்பட்டது.
இது ஒரு ஆபத்தான முடிவும் தீர்மானமும் ஆகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம். வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நாள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகி பதுளை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கின்ற நிலையில் எமது அரசியல் நிலைப்பாட்டினை மிக நிதானமாக மேற்கொண்டோம். இன நல்லிணக்கத்தை உறுதி செய்தல், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் ஆகிய எமது இரண்டு அடிப்படைகளிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டோம். ஏமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தல் என்ற தீர்மானத்தை மேற்கொண்டோம். இப்போது இருக்கின்ற தெரிவுகளுள் இதுவே ஊவா மாகாண முஸ்லிம்களுக்கான மிகச்சரியான தெரிவாக இருக்க முடியும் என நாம் நம்புகின்றோம்.
பதுளை மாவட்ட முஸ்லிம்களுக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை எழுத்து மூலம் உறுதிப்படுத்தி, இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி அத்தோடு இந்நாட்டில் நிலவும் இனவாத நடவடிக்கைகள் ஊழல் மோசடிக்கெதிரான நடவடிக்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய மிகவும் வெளிபப்டையான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்டிருக்கின்றோம்.
இப்போது முன்பை விடவும் பதுளை முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கை வைக்க முடியும். தங்களுடைய வாக்குகளை எவ்வித தயக்கமும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் மாத்திரமே களமிறக்கப்பட்டுள்ளார்கள், எனவே மூன்றாவது வாக்கினை முஸ்லிமல்லாத ஒருவருக்கு வழங்கும் வாய்ப்பு திறந்தே இருக்கின்றது, அது மாத்திரமல்ல் ஒரு முஸ்லிம் இரு முஸ்லிமல்லாதோர்க்கு வாக்குகளை வழங்கவும் வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறாக நாம் அடிப்படையாக எதிர்பார்த்த இரண்டு இலக்குகளையும் மையபப்டுத்தி எமது தேர்தல் பங்குபற்றுதலை நாம் ஊவாவில் மேற்கொள்கின்றோம்.
அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, அவனதும் அவனது தூதரினதும் வழிகாட்டல்களை விசுவாசித்தவர்களாக முன்மாதிரிமிக்க அரசியல் கலாசாரமொன்றினை நடைமுறையில் காட்டுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கியிருக்கின்றோம், எண்ணங்களும் முயற்சியும் எம்முடையது, விளைவுகளும் முடிவுகளும் அவனுடையது. எனவே எமது பாதை புனிதமானது, மக்களுக்கு நன்மையளிக்கக்கூடியது, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
ஊவா மக்களே இது உங்களுக்கான நேரம். தீர்மானியுங்கள் செயற்படுங்கள். நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் வெற்றியிருக்கிறது...!
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment