கரையோர மாவட்டம் ஏற்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றம்
Monday, September 22, 20140 comments
அம்பாறை கரையோர மாவட்டத்தை உடனடியாக ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு சபை மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.றியாஸ் அம்பாறை கரையோர மாவட்டத்தை உறுவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.
இந்தப் பிரேரணை தொடர்பில் விவாதத்திற்கு விடப்பட்டபோது, சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
அம்பாறை மாவட்ட்திலுள்ள சிறுபான்மை மக்களின் நலன்கருதி கரையோர மாவட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் சிந்தனையாகும். அவரது மறைவிற்கு பிறகு அது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அரசாங்கத்திடம் பலமான கோரிக்கையாக கரையோர மாவட்டம் ஏற்படுத்தல் விடயம் பேசப்பட்டிருந்தாலும் இதுவரைக்கும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கரையோர மாவட்டம் உருவாக்கப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இங்கு நிறைவேற்றபப்ட்ட தீர்மானத்தை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அன்ஸில் குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment