ஊவா மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாணத்தில் வாழ்ந்து வரும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சிறந்த பாடமொன்றை புகட்டியுள்ளனர்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதனால் வாழ்வதற்காக உரிமையே பாரியளவில் சவாலுக்குள்ளாகியுள்ளது.
தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து அரசாங்கம் பாரியளவில் நிவாரணங்களையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தது. அதேநேரம் அரசாங்கம் பாரியளவில் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டது.
எனினும் இந்த அழுத்தங்களுக்கு எதிராக ஊவா மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் சிறந்த பாடமொன்றை அரசாங்கத்திற்கு புகட்டியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை வேண்டாம் என்றே குறிப்பிடுகின்றனர்.
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலான 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அடிக்கடி குரல் கொடுக்கும் விமல் வீரவன்ச தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எதிராக குரல்கொடுக்கும் இனவாத அமைப்புக்களுடன் இணைந்து கொண்டு செயற்படுகின்றார்.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை விவகாரங்களில் இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் தலையீடு செய்யக் கூடாது எனக் கோரும் அதிகாரம் விமல் வீரவன்சவிற்கு கிடையாது.
பல்வேறு இன மக்களிடையே ஐக்கியம் ஏற்படுவதனை எதிர்க்கும் இவ்வாறான நபர்களின் நடவடிக்கைகளினால் தமிழ் முஸ்லிம் மக்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடுவதாக வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

Post a Comment