ஊவாவில் துஆ கட்சியை களமிறக்கியது வரலாற்றுத் தவறாகும் - வேட்பாளர் அமீர்
Sunday, September 7, 20140 comments
இன்னும் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதால் வெட்கப்படுவதாக கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் துஆ கட்சியை களமிறக்கியதன் மூலம் மீண்டும் ஊவா மாகாண முஸ்லிம்களுக்கு வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டார் என ஊவா மாகாண முன்னாள் உறுப்பினரும் ஐ.தே. கட்சி அபேட்சகருமான ஏ. அமீர் மொஹமட் தெரிவித்தார்.
வெலிமடை, குருத்தலாவ பிரதேசங்களில் இடம் பெற்ற தேர்தல் பிரசார வைபங்களின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
இன்று அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டு செயல்படும் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஊவா மாகாண சபை தேர்தலில் தனது சுயநலம் கருதி பதுளை மாவட்டத்திலுள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடித்து முஸ்லிம்களின் மாகாண சபை உறுப்புரிமையினை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இவர் இவ்வாறு தனித்து பலரை தேர்தலில் போட்டியிடச் செய்து இங்கு வழமை போன்று ஐ.தே. கட்சியில் போட்டியிட்டு வெல்லும் முஸ்லிம் அபேட்சகர்களுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடித்து முஸ்லிம் உறுப்புரிமை இல்லாத மாபெரும் வரலாற்று தவறினை செய்திருந்தார். இதனால் இம் மாவட்ட முஸ்லிம்களின் வாக்கு சிதைந்து சிதறடிக்கப்பட்டதே அன்றி முஸ்லிம் காங்கிரஸ் மூலமோ அல்லது ஐ.தே. கட்சி சார்பிலோ எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவாகவில்லை.
இதேபோன்று இம்முறை இடம்பெறும் ஊவா மாகாண சபை தேர்தலின் போது தனது துஆ கட்சியினை களமிறக்கி எந்தவொரு அரசியல் அல்லது சமூக செயற்பாடுகளும் தெரியாதவர்களை போட்டியிடச் செய்துள்ளார். இதனால், இம்மாவட்டத்திலுள்ள வாக்குகள் சிதறடிக்கப்படும் வாய்ப்பினைத் தோற்றுவித்து மீண்டும் பதுளை வாழ் முஸ்லிம் மக்களுக்கு வரலாற்று தவறை இழைத்துள்ளார் என்றார்.
Post a Comment