கருமலையூற்று பள்ளிவாயல் தகர்ப்பு; முதலமைச்சரின் கையாலாக தனமே - இம்ரான் மஹ்ரூப்

Sunday, August 17, 20142comments


திருகோணமலை மாவட்டத்தின் தொன்மைமிகு பள்ளிவாயல்களுள் ஒன்றான கருமலையூற்று பள்ளிவாயல் தகர்ப்பு விவகாரம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கையாலாகாத் தனத்துக்கு சிறந்த உதாரணமாகும் என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருமலையூற்றுப் பள்ளிவாயல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாயலாகும். இந்த வகையில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையை எடுத்துக்காட்டும் முக்கிய வரலாற்றுச்சின்னமாக இது விளங்கியது. முழுமையாக இப்பள்ளிவாயல் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இங்கு தொழுகை நடத்தவோ, இதனை பராமரிக்கவோ முடியாத நிலை காணப்பட்டது.

இதனால் இப்பள்ளிவாயலை படையினரிடமிருந்து விடுவித்து பொதுமக்கள் பாவனைக்கு விட வேண்டும் என கிழக்கு மாகாணசபையில் கடந்த 2012 நவம்பரில் ஆளுங்கட்சி உறுப்பினர் அமீர் அலியினால் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாணசபைக்குப் பொறுப்பானவர் என்ற வகையில் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மூன்று மாத காலத்திற்குள் பள்ளியை விடுவித்து தருவதாக முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இதன் போது வாக்குறுதியளித்திருந்தார்.

கிழக்கு மாகாணசபையில் சிறுபான்மையினர் பிரச்சினை, காணிப் பிரச்சினை தொடர்பாக பிரேரணை வரும் போதெல்லாம் கருமலையூற்று பள்ளி விடுவிப்பு தொடர்பாக முதலமைச்சருக்கு நாம் ஞாபகப் படுத்தி வந்தோம்.
எனினும், இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டு 20 மாதங்கள் கடந்த போதிலும் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இது விடயத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று நமது வரலாற்றுத் தொன்மை மிகு பள்ளிவாயல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. நமக்காக இருந்த வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த பள்ளி உடைப்புக்கான முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்க வேண்டும். முக்கிய பொறுப்பை ஏற்றிருப்பவர் அதனைச் சரியாக நிறைவேற்ற வேண்டும். தன்னால் முடியாவிட்டால் செய்பவருக்கு வழிவிட்டு ஒதுங்கி விட வேண்டும். அப்போது வரலாறு போற்றும். இன்று இந்த கையாலாகாத் தனத்தினால் பள்ளியை உடைக்க வழிவிட்ட குற்றத்திற்காக முதலமைச்சரை வரலாறு தூற்றும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

கருமலையூற்று பள்ளியை உடைக்க வழிவிட்ட குற்றத்தை முஸ்லிம் காங்கிரசும் ஏற்க வேண்டும். அந்த கட்சியால் உருவாக்கப்பட்டவர் தான் இந்த முதலமைச்சர். இன்றும் அவருக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதும் முஸ்லிம் காங்கிரஸ் தான். சமூகத்திற்கு உருப்படியாக எதாவது செய்யாவிட்டாலும் இருப்பவற்றை பாதுகாக்கின்ற நிலையையாவது செய்ய வேண்டும். இந்த எண்ணம், முஸ்லிம் காங்கிரசிடமோ அதனால் உருவாக்கப்பட்ட முதலமைச்சரிடமோ இல்லை. தமது சுயநலத்துக்காக அரசாங்கம் செய்கின்ற எல்லா ஆட்டங்களுக்கும் தாளம் போடும் நிலையையே முஸ்லிம் காங்கிரஸ் இன்று செய்து வருகின்றது.

முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் அக்கட்சிக்கு தேர்தல் காலத்தில் வாக்களிப்பதற்கு மட்டுமே தேவையானவர்கள். மாறாக இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நிலை அதனிடம் இல்லை. இதன் ஒரு அம்சம் தான் கருமலையூற்று விவகாரமுமாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

+ comments + 2 comments

8/25/2014 11:23 PM

hmmm

8/25/2014 11:24 PM

y

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham