38 வருட காலம் ஐ.தே.க.வின் ஆளுகைக்குட்பட்டிருந்த மாத்தளை மாநகர சபை நிர்வாகம் ஸ்ரீ.ல.சு.க.வினால் கைப்பற்றப்பட்ட பின்னரே மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய அளவில் அபிவிருத்திக்குட்பட்டு வருகிறதென்று மாநகர முதல்வர் ஹில்மி மொகமட் கரீம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
மாத்தளை நகர மத்தியில் அமைந்துள்ள பொதுச்சந்தைக்கான கட்டிடத்துக்குரிய வரைபடம் 2001ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் தயாரிக்கப்பட்டது. இந்த மூல வரைபடத்தில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகம், தமக்கு வேண்டியவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக பல மாற்றங்களைச் செய்தது. இந்த வரைபடத்துக்கான உரிய அனுமதி பெறப்படுவதற்கு முன்பே அன்றைய நகர அபிவிருத்திக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானைக் கொண்டு அடிக்கல் நாட்டுவித்தனர். இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் காணப்படும் எல்லா குறைபாடுகளுக்குமே காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள்தான் இப்போது நம்மேல் பழியைப்போட்டு விமர்சனம் செய்கின்றனர். இந்த பொதுச்சந்தைக் கட்டிடத்தில் நிலவும் குறைபாடுகளை இவ்வாண்டு இறுதிக்குள் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாசிகசாலையில் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 200 மில்லியன் நிதி உதவியில் பெர்னாட் அலுவிகார மைதானம் புதுப்பொலிவு பெறவிருக்கிறது. இதுதவிர மாநகர மண்டபம், பஸ் நிலையம் ஆகியவற்றின் புனர்நிர்மாணத்துக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக் ஷ 40 மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளார்.
நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் நகரின் கழிவுப்பொருள் முகாமைத்துவத்தை சீர் செய்வதற்காக ஜைக்கா நிறுவனம் விசேட நிபுணர் ஒருவரை இரண்டு வருடத்துக்கு இங்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மாத்தளைக்கு விஜயம் செய்தபோது எத்தனை விறுவிறுப்பாக அதிகாரிகள் செயல்பட்டார்களோ அதே துடிப்புடன் தொடர்ந்தும் அவர்கள் பணியாற்ற வேண்டும்'' எனக்கேட்டுக் கொண்டார்.
உறுப்பினர் ஹாரிஸ் மொகமட் பேசியபோது;
மாத்தளை நகரில் புதிது புதிதாக சுருட்டுக்கடை என்ற பெயரில் திறக்கப்பட்டு வரும் கடைகளில் பாபுல் போதைப்பொருள் மிகத்தாராளமாக விற்பனை செய்யப்பட்டு இளைய சமுதாயத்தைப் பாழடித்து வருவதாகவும் அத்தகைய கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய வேண்டுமென்றும் பூங்காவின் பிரதான நுழைவாயிலில் கேட் ஒன்று இல்லாமையால் மாலை வேளைகளில் அது குடிகாரர்களின் பூங்காவாக மாறிவிட்டுள்ளதென்றும் உடனடியாக கேட் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment