இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதமோ, சர்வதேசத் தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய குழுக்களோ இல்லை. நாடு அமைதியான சூழலில் உள்ளது என தெரிவிக்கும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பாதுகாப்பு செயலாளரின் கடிதத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என குறிப்பிட்டிருக்கவில்லை. ஊடகங்கள் திரிவுபடுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளுடன் இலங்கையில் உள்ள ஒரு சில முஸ்லிம் குழுக்கள் தொடர்பு வைத்துள்ளனர். இவை தொடர்பில் பாதுகாப்பு பிரிவு அவதானத்துடன் செயற்படுவதாக பாதுகாப்பு செயலாளர் அமெரிக்காவின் சிக்கல்களுக்கான நடவடிக்கை மையத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பில் முக்கிய முஸ்லிம் கட்சிகள் தாம் எதிர்ப்பினை தெரிவித்திருந்தன.
இது தொடர்பில் வினவிய போதே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் மிகவும் அவதானமாக உள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினை நாட்டில் முற்றாக அழித்த பின்னர் யுத்தத்திற்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் நாட்டினுள் பயங்கரவாத அமைப்புகளோ, செயற்பாடுகளோ இல்லை. அதேபோல் அண்மைய காலங்களில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும், நடவடிக்கைகளும் இலங்கைக்குள் தலைதூக்கியுள்ளதென சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். அதேபோல் பாதுகாப்பு செயலாளர் ஒருபோதும் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதமொன்று உள்ளதெனத் தெரிவிக்கவுமில்லை. ஊடகங்கள் செய்திகளை தவறாகப் பிரசுரித்துள்ளதா அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனரா என்பது எமக்குத் தெரியவில்லை. எனினும் பாதுகாப்பு செயலாளரின் கடிதத்தில் இலங்கையில் தீவிரவாதம் உள்ளதென கூறப்பட்டிருக்கவில்லை.
மேலும் முஸ்லிம் இனத்தவர் இலங்கையர் என்ற உணர்வுடன் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமே தவிர தனித்து செயற்பட வேண்டாம். சர்வதேச இஸ்லாமிய அமைப்புகள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றன. அதற்கு துணை போகக்கூடாது. ஒரு சில அமைப்புகள் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோல் சுயநல அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம் கட்சிகள் இக் கருத்துக்களை தமக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவை எவையும் உண்மை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
Post a Comment