ஊவா தேர்தல் களம்: எரிகின்ற நெருப்பில் பெற்றோலை ஊற்றலாமா? (சிறப்பு கட்டுரை)

Sunday, August 31, 20140 comments


கிண்ணியா சை.மு.ஸப்ரி
இரண்டாம் வருடம்
ருகுணு பல்கலைகழகம்

புலிப் பயங்கரவாதம் எனும் கருப்பொருளை கொண்டு 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற மஹிந்த அரசாங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் மாயையை மக்கள் முன் முன்வைக்கத் தொடங்கியுள்ளது. இவர்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவே சேனாக்களையும் உருவாக்கியது. இவர்களும் இஸ்லாமிய தீவிரவாதம் நாட்டில் உள்ளது என்று நிரூபிக்க பௌத்த பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர். தற்போது ஒவ்வொரு பெரும்பான்மையினரின் மனதிலும் அடிப்பதைவாதத்தை விதைத்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் வெற்றியும் பெற்று விட்டனர். அதன் வெளிப்பாடே தம்புள்ளை தொடக்கம் பேருவளை வரை இடம்பெற்ற பௌத்த பேரினவாதே வெறியாட்டம்.

சட்டம் இவர்கள் முன் இன்னும் கை கட்டியே நிற்கிறது. ஆனால் எம் சமூகத்தின் மீது சட்டம் தன் உச்சகட்ட கடமையை செய்து கொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடே அண்மையில் நான்கு இளைஞர்கள் குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டது. ஆனால் மறுபக்கம் சுவரொட்டி, துண்டுபிரசுரம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் என சேனாக்கள் தம் கடமையை செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்கள்.

இவ்வாறான சந்தர்பத்திலேயே ஊவா மாகாண சபை தேர்தல் எம் சமூகத்தை நோக்கி வந்துள்ளது. இத்தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுகின்றமையால் இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்கும் இத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. மேல், தென் மாகாண சபைகளில் அரசாங்கம் இழந்த 18 ஆசனங்களை சரி செய்து தாம் வீழ்ச்சி அடையவில்லை என சர்வதேசத்துக்கு காட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. எம்மால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்று காட்ட வேண்டியே தேவை ஐக்கிய தேசிய கட்சியிடம் உள்ளது. எமது சமூகத்தை பொருத்தவரை இது நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலைப் போன்று ஒரு தீர்மானமிக்க தேர்தல். தம்புள்ள பிரட்சினைகுப் பிறகு கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது போன்று பேருவளை பிரச்சினைகுப் பிறகு ஊவா மாகாண சபை தேர்தல் நடைபெற உள்ளது.

கிழக்கில் அரசாங்கம் பயன் படுத்திய அரசியல் காய்நகர்த்தலையே ஊவாவிலும் பயன்படுத்துகிறது. தம்புள்ள பிரட்சனையின் பின் கிழக்கில் முஸ்லிம்களின் வாக்குகளை அரசாங்கம் பெறுவது கடினம் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட்டால் காங்கிரஸின் கோட்டைகளும் சரிய வாய்ப்புண்டு என அறிந்த அரசாங்கம் காங்கிரசை தனித்து போட்டியிட வைத்தது. இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் பக்கம் திரும்பியது. தேர்தல் மேடைகளில் அரசாங்கத்தையும் மஹிந்தவையும் மஹிந்தவின் அனுமதியுடன் திட்டி தீர்த்த ஹக்கீம் தேர்தல் முடிவடைந்ததும் அரசாங்கத்திடம் சரணாகதியடைந்து தற்போதைய கிழக்கின் பொம்மை ஆட்சிக்கு முட்டு கொடுத்தது யாவரும் அறிந்ததே.

இதேபோன்று ஊவாவிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் மக்களை கிழக்கில் போன்று ஏமாற்ற முடியாது என உசாரடைந்த அரசு பரம எதிரிகளாக மக்கள் முன் காட்டப்பட்ட ஹக்கீமையும் ரிஷாத்தையும் கூட்டணி சேர வைத்துள்ளது. இவர்களும் சிங்கத்துக்கு பயந்து கீரியும் பாம்பும் நட்பு கொண்டாடுவது போல் ஊவாவில் நடித்து கொண்டிருகிறார்கள். ஊவாவில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதும் ஒன்றுதான் ரிஷாத்தின் கட்சியுடன் சேர்ந்திருப்பதும் ஒன்றுதான். ஏன் எனில் ரிஷாத்தின் கட்சியால் ஊவாவில் 100 வாக்குகளை கூட பெற முடியாது. இதை அவரே தேர்தலுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் மறைமுகமாக தனக்கு ஊவாவில் போட்டியிடும் எண்ணம் ஏதும் இல்லை என என்று கூறியிருந்தார்.

ஆகவே இவர்களின் நோக்கம் இங்கு சமூக ஒற்றுமையல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை சமூக ஒற்றுமை எனும் மாயையை காட்டி இல்லாமல் செய்வதே ஆகும்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்ததில் இருந்து அது செய்த மூன்றாவது வரலாற்று தவறு இதுவாகும். 18 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்தது, கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தது ஏனைய இரண்டுமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்திருகாவிட்டால் அரசாங்கத்தால் இரண்டில் மூன்று பெரும்பான்மையை பெற்று 18 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்ததை நிறைவேற்றியிருக்க முடியாது. இதன்போது காங்கிரஸ் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகள் இன்னமும் கோரிக்ககைளாகவே உள்ளன. முஸ்லிம்களின் காணிகள் விகாரை காணிகளாகவும் குடியேற்ற காணிகளாககவும் தொடர்ந்து மாற்றம் பெற்று கொண்டே வருகின்றன. ஆனால் அன்று அரசுக்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் கூறிய நொண்டிச் சாக்கு நாங்கள் ஆதரவளிக்காவிட்டால் சில பாராளமன்ற உறுப்பினர்கள் அரசின் பக்கம் சென்றிருப்பார்கள் என்பதாகும். ஆனால் உயர் மட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் மறந்துவிட்டார்கள் கட்சியில் உள்ள சமூக துரோகிகளை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதற்கான அரிய சந்தர்பம் அதுவென்பதை. தற்போது ஊவா மேடைகளில் ஹக்கீம் கூறிதிரிகிறார் “நான் 18 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்ததை ஆதரித்து மிகப் பெரும் தவறிழைத்துவிட்டேன்” என. செய்த தவறை ஒப்புக்கொண்டு செய்யவிருக்கும் தவறுக்கு அணுமதி கோறுகிறார்.

அடுத்தது கிழக்கு மாகாண சபையில் மக்களின் அரசுக்கு எதிரான ஆணையை அரசிடமே ஒப்படைத்தது. இரண்டு வருடங்களின் பின் முதலமைச்சர் பதவி கரையோர மாவட்டம் என்றல்லாம் ஹக்கீம் அன்று கதை கூறினார். இன்றுவரை அனைத்து ஒப்பந்தங்களும் ஒப்பந்தங்களாகவே உள்ளன. எதிர்காலத்திலும் பொம்மை முதலமைச்சரே மாகாணசபையில் தூங்கி கொண்டிருப்பார் போல் தெரிகிறது. கரையோர மாவட்டம் இன்னும் வரைபடமாகவே உள்ளது. புல்மோட்டை,தோப்பூர் என காணிகள் ஆக்ரமிக்கப்பட்டு கொண்டே உள்ளன. கிழக்கு மக்கள் ஹக்கீமிடம் கொடுத்த பேரம் பேசும் சக்தியை கொண்டு அவர் இதுவரை சாதித்தது என்ன ?

தற்போது ஹக்கீம் ஊவாவில் சென்று இனக்குரோதத்தை வளர்துகொண்டிருகிறார். ஊவா கிழக்கை போன்று தனி முஸ்லிம்களை கொண்ட பிரதேசமல்ல. பெரும்பான்மையினருடன் எம் சகோதரர்கள் ஒன்றாக வாழும் ஓர் இன ஐக்கியமிக்க பிரதேசம். அங்கு சென்று இனக்குரோத கருத்துகளையும் உணர்ச்சிபூர்வமான பேச்சுகளாலும் வாக்குகளை சேகரிக்கிறார். இது தற்போது எரிகின்ற நெருப்பில் பெற்றோலை ஊற்றும் செயல். இதை விட அனைத்து பிரட்சினைகளின் போதும் எமது சமூகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிலான் பெரேரா போன்றோருக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் நின்றிருந்தாலாவது எம் சமூகம் சார்பாக காட்டும் நன்றி கடனாக கருதப்பட்டிருக்கும்.

இவர்களின் நோக்கம் ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது அல்ல. ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய இல்லாமல் செய்வதே ஆகும். சிலவேளைகளில் காங்கிரஸ் கூட்டணியில் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுமிடத்து கிழக்கில் நடந்த கதையே ஊவாவிலும் நிகழும். ஆகவே ஊவா முஸ்லிம்கள் வரலாற்று முக்கியத்துவமிக்க இத் தேர்தலில் நன்கு சிந்தித்து தமது வாக்குகளை பயன்படுத்துமாறு எமது சமூகத்தின் சார்பாக கேட்டுகொள்கிறேன்.


Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham