பொதுபலசேனா இந்நாட்டுக்குள் ஒரு தீவிரவாத அமைப்பாக தலைதூக்கியுள்ளது. எதிர்காலத்தில் இது பயங்கரவாதமாக தலைதூக்கும் தேசிய சூறா கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் நாடுகளுக்குள் அத்து மீறி நுழையும் மேற்குலக நாடுகள் அம் மக்களையும் நாட்டையும் அடிமைப்படுத்துவதன் காரணமாகவே முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்குகின்றதென்பதை பொதுபலசேனா ஏன் உணரவில்லை எனக் கேள்வி எழுப்பும் தேசிய சூறா கவுன்சிலின் உப தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.ஷூஹைர், தேசிய சூறா கவுன்சில் தேசிய ரீதியாக இயங்கும் அமைப்பே தவிர சர்வதேச ரீதியில் எவ்விதமான தொடர்புகளும் அதற்கு கிடையாதென்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஷூஹைர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தேசிய சூறா கவுன்சிலும் உலமா சபையும் ஏன் உலகளாவிய ரீதியில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களை விமர்சிப்பதில்லை என்ற கேள்வியை பொதுபலசேனா எழுப்பிய கேள்வியானது எம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நோக்கிலானதாகும். இக்கேள்விக்கு நாம் பதிலளித்தால் எமக்கு இவ் அமைப்புக்களுடன் தொடர்பிருப்பதாக கதையை கட்டவிழ்த்து விடுவதே உள்நோக்கமாகும்.
உலகில் முஸ்லிம் தீவிரவாதம் வியாபிப்பதற்கான காரணம் என்ன என்பதை குற்றம் சுமத்துபவர்கள் முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முஸ்லிம் நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என பல முஸ்லிம் நாடுகளுக்குள் மேற்குலக நாடுகள் நுழைந்து அந்நாட்டுக்குள் மக்களை கொன்று குவித்து, அட்டூழியங்களை மேற்கொள்கின்றது. அதுமட்டுமல்லாது நாடுகளை சின்னாபின்னமாக்குகின்றது.
இதன் காரணமாகவே தமது மக்களையும், நாட்டையும் பாதுகாக்க முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்குகின்றது. இதனை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் ஏன் என்பதை ஆராய வேண்டும்.
இஸ்லாமிய மார்க்கத்தையும் போதனைகளையும் மீறி செயற்படும் எவரையும் ஆதரிக்கமாட்டோம். அதனை எதிர்ப்போம்.
இன்று பொதுபலசேனா இந்நாட்டுக்குள் ஒரு தீவிரவாத அமைப்பாக தலைதூக்கியுள்ளது. எதிர்காலத்தில் இது பயங்கரவாதமாக தலைதூக்கும்.
தீவிரவாதம் பற்றி பேசும் இவர்கள் பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான நாட்டை ஆக்கிரமித்து சிறுபிள்ளைகளையும் மக்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் தொடர்பில் மெளனம் காப்பது ஏன்?
அண்மையில் உலக முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களுடன் இங்கு சிலர் இயங்குவதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது. இதனை நிராகரிக்கின்றோம்.
இலங்கையின் முஸ்லிம்கள் நாட்டு பற்றுக்கொண்டவர்கள். ஒருபோதும் நாட்டுக்கு எதிராக செயற்படமாட்டார்களென்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment