பிரிட்டன் பாடசாலைகளில் உறவு முறைகள் மற்றும் பாலியல் கல்வியை ஏழு வயது முதலேயே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணிஅரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது.
வயதுக்கு ஏற்ப மாணவர்களின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான தொழிற் கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது.
லிபரல் டேமாக்ரட்ஸ் தேர்தல் திட்டத்தின்படி, 7 முதல் 11 வயது வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு பாலியல் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என்று லிபரல் டேமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவிட் லாஸ் கூறியுள்ளார்.
தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களால் நடத்தப்படும் பாடசாலைலகளில் பாலியல் கல்வி போதிக்கப்படுகிறது, ஆனால் பிரிட்டன் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பாடசாலைகளிலும் தனியார் பாடசாலைகளிலும் பாலியல் கல்வி போதிக்கப்படுவதில்லை.
பாலியல் கல்வி ஆறாம் தரம் வரையிலான ஆரம்ப பாடசாலைகளில் போதிக்கப்படாவிட்டாலும், ஏழாம் தரம் முதல் கற்பிக்கும் உயர்நிலைப்பாடசாலைளில் பாலியல் கல்வி கட்டாயம் சொல்லித் தரப்படுவதாக பாடசாலை கல்வித் துறை சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment