ஹக்கீமும் ரிஷாதும் ஊவா முஸ்லிம்களை ஆபத்தில் தள்ளிவிட்டார்கள் - அஸ்மின் அய்யூப்
Friday, August 29, 20140 comments
அமைச்சர்களான ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஊவா மாகாண முஸ்லிம்களை மிகப் பெரும் ஆபத்தில் தள்ளிவிட்டிருக்கின்றனர் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெ ளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,
இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன என்பது புதிய விடயம் அல்ல. ஆனால் முஸ்லிம் – சிங்கள இனங்களுக்கிடையில் வன்முறையை நோக்கிக் கூர்மையடையும் இனமுரண்பாடுகள் வரலாற்றில் என்றுமில்லாதவாறு உச்ச அளவில் அதிகரித்திருக்கின்றமை புதிய விடயமே. இந்த சந்தர்ப்பத்தில் எல்லாவகையான உது்திகளையும், சாணக்கியங்களையும் கையாண்டு இனமுரண்பாட்டு நிலையினைத் தவிர்ப்பது அனைத்து தரப்பினரதும் தலையாய கடமையாகவும் பொறுப்பாகவும் மாறியிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் இனமுரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கும் நல்லிணக்கத்தை சமூகங்களிடையே மேம்படுத்துவதற்கும் அரசியல் ரீதியான முயற்சிகள் அத்தியாவசியப்படுகின்றன.
குறிப்பாக ஆளும் தரப்பினரிடையே அதிகரித்துக் காணப்படும் இனமுரண்பாட்டு நிலையினைத் தனிப்பதற்கு அல்லது அது தவறானது இந்த நாட்டு மக்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்று உணர்த்துவதற்கு அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்.
தற்போதைய ஆளும் தரப்பின் அமைச்சர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன போன்றோர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக வெளிப்படையாக செயற்படுகின்ற சூழ்நிலையில் அத்தகையவர்களைப் பலப்படுத்தாமல், அவர்களோடு இணைந்து செயற்படாமல், ஆளும்தரப்பில் இருந்துகொண்டு எல்லாவிதமான சலுகைகளையும் வசதிவாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டு ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறி முஸ்லிம்களின் வாக்குகளை இலக்குவைத்து தனியான கூட்டணி அமைத்து தேர்தலில் குதித்திருப்பது ஊவா முஸ்லிம்களை ஒரு ஆபத்திற்குள் தள்ளிவிடும் கபடத்தனமான செயற்பாடாகும்.
அத்தோடு மிகச் சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற ஊவா முஸ்லிம்களை பெரும்பான்மை அரசியல் கட்சிகளில் இருந்து தனிமைப்படுத்தி, அவர்களைக் காட்டிக்கொடுக்கின்ற ஒரு கபடத்தனத்தையே இவர்கள் இருவரும் தற்போது முன்னெடுத்திருக்கின்றார்கள். இந்த ஆபத்தில் இருந்து ஊவா முஸ்லிம்களை மீட்கவேண்டிய பொறுப்பு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது. குறிப்பாக முன்மாதீரி மிக்க, நல்லாட்சி குறித்து சிந்திக்கின்ற, செயலாற்றுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொறுப்பாகவும் அமைகின்றது.
ஊவா மாகாணசபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் அதே சந்தர்ப்பத்தில் ஊவாவில் இனநல்லுறவு எவ்விதத்திலும் பாதிப்படையக்கூடாது. பெரும்பான்மை கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இனநல்லுறவிற்கான உத்தரவாதம் எழுத்து மூலமும் செயற்பாடுகளின் மூலமும் உறுதி செய்யப்படுகின்ற அரசியல் நடவடிக்கையே ஊவாவிற்கு அவசியமாகின்றது. மாறாக இனவெறுப்பு பிரச்சாரத்தை தூண்டும் வகையிலும், முஸ்லிம்களை ஊவாவில் இருக்கின்ற ஏனைய இனங்கள் அந்நியமாக நோக்கும் விதத்தில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது எவ்வகையில் சாணக்கியமான, மிகப்பொறுத்தமான முடிவாகவும், வழிமுறையாகவும் அமையும் என்ற கேள்வி எழுகின்றது.
இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்திலும், மேற்கு, வடமேல் மாகாணங்களிலும் முஸ்லிம் வாக்குகளைக் கொள்ளையடித்து தம்முடைய அரசியல் விசுவாசத்தை ஆளும்தரப்பினர்க்குத் தாரைவார்த்த தேர்தல்கால கொள்ளையர்களிடம் இருந்து ஊவா மாகாண முஸ்லிம்களைப் பாதுகாக்கவேண்டியது எமது கடப்பாடாகும். என ஊவா மாகாணசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் நடைபெற்ற முன்னணியின் விஷேட தலைமைத்துவ சபை அமைர்வில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் தெரிவித்தார்கள்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment