கருமலையூற்று பள்ளிவாசல் கதை முடிந்ததா? (சிறப்பு கட்டுரை)

Friday, August 29, 20140 comments


எஸ்.என்.எம்.ஸுஹைல்

பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக கோஷம், பள்­ளி­வா­சலை மூடக்­கோரி அச்­சு­றுத்தல், பள்­ளி­வாசல் தகர்ப்பு, பள்­ளி­வா­ச­லினுள் கழிவு எண்ணெய் வீச்சு, பள்­ளி­வாசல் மீது கல் வீச்சு தாக்­குதல், பள்­ளி­வா­சலினுள் பன்றியை வெட்­டிப்­போட்டு அட்­ட­காசம் என்ற செய்­திகள் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இலங்­கையின் ஊட­கங்கள் மூலம் வெ ளிவரும் முக்­கிய செய்­தி­க­ளாக மாறி­விட்­டன.

இந்­நி­லையில் கடந்த(08.17.) ஞாயிற்றுக் கிழமை கிழக்­கி­லி­ருந்து மற்­று­மொரு பள்­ளி­வாசல் தொட­ர்பான செய்தி வெளி­வந்­தது. இது இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வல­யத்­தி­லுள்ள கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் பாது­காப்பு தரப்­பி­னரால் உடைக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரான  இம்ரான் மஹ்ரூப் ஊடகங்களுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் மறு­தினம் திங்­கட்­கி­ழமை (18) கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் முற்­றிலும் மாறு­பட்ட கருத்­தொன்றை தெரி­வித்­தி­ருந்தார். அதா­வது, ''பள்­ளி­வாசல் இரா­ணு­வத்­தி­னரால் தகர்க்­கப்­ப­ட­வில்லை. கடந்த சில தினங்­க­ளாக பெய்த பெரும் மழையின் கார­ண­மா­கவும் கடும் காற்றின் கார­ண­மா­க­வுமே பள்­ளி­வாசல் இடிந்­துள்­ள­தாக இரா­ணு­வத்­தினர் தெரி­வித்­தனர்.  பள்­ளி­வா­ச­லுக்கு நேரில் சென்று பார்­வை­யிட்­டதன் மூலம் அதனை உறு­தி­ப­டுத்­தினேன்'' என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் அக்­க­ருத்து ஆரா­யப்­பட வேண்­டி­யதே. இருந்­தாலும் இது பெரிதும் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ளது. இருப்­பினும் இவ்­வி­வ­காரம் அர­சி­ய­லாக்­கப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல.

பள்­ளி­வா­சலின் அமை­விடம்

திரு­கோ­ண­மலைத் தறை­மு­கத்­துக்கு மேற்கே திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தேச செய­லகப் பிரிவின் வெள்ளை மணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்­துள்ள ஓர் தொன்மை மிக்க கிரா­மம்தான் கரு­ம­லை­யூற்று.
மகா­வெலி கங்கை சங்­க­மிக்­கின்ற  கொட்­டி­யா­ரக்­கு­டாவின்  கரை­யோரக் கிரா­மங்­களுள் கரு­ம­லை­யூற்று கிரா­மமும் ஒன்­றாகும். இது ஒரு அழ­கிய வெள்ளை மணலைக் கொண்ட கடற்­கரைக் கிரா­ம­மாகும். பார்ப்­போரின் உள்­ளத்தை வசீ­க­ரிக்­கக்­கூ­டிய மாபிள் பீச் என்ற கடற்­க­ரையும் இக் கிர­மத்தின் தொடர் கடற்­க­ரை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.
வெள்ளை மணல் ஒரு­புறம் அழகைக் கொடுக்க, மறு­புறம் 1836 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் காலத்தில் இந்­திய சிற்பக் கலை நுட்­பங்­க­ளோடு நிர்­மா­ணிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல். இது­மட்­டு­மல்ல, பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் கற் பிள­வொன்­றி­லி­ருந்து ஓயாது மிகவும் தெளி­வான சுவை­யான தூய்­மை­யான தண்­ணீரைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்ற நீர் ஊற்று.
இது இன்னும் அதி­சய ஊற்­றா­கவே இருந்து கொண்­டி­ருக்­கி­றது. பள்­ளி­வாசல் நீர்த்­த­டாக மண்­ட­பத்­துக்­காக (ஹவ்ழ்) நீர் விநி­யோ­கத்தை இந்த நீர் ஊற்றே வழங்கி வரு­கின்­றமை எல்­லோ­ரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்­டி­ருக்­கி­றது.

இலங்கை முஸ்­லிம்­களின் 
வர­லாற்றுச் சின்னம்

 இந்த பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் நான்கு சியா­ரங்­களும் காணப்­ப­டு­கி­ன­றன. இதனை நாற்­பது முழ சியாரம் என்று முன்­னோர்கள் அழைக்­கின்­றனர்.
இவ்­வாறு பல்­வேறு வகை­யிலும் முக்­கி­யத்­து­வம்­பெற்று  திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்­லிம்­களின் தொன்­மையை எடுத்துக் காட்டும் ஒரு வர­லாற்றுச் சின்­ன­மாக விளங்­கிய இப் பள்­ளி­வாசல்  2014 ஆகஸ்ட்  16 ஆம் திகதி இரவு அடை­யாளம் தெரி­யாத அள­வுக்கு அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தேச வாசிகள் தெரி­விக்­கின்­றனர்.

யுத்­தத்­துக்கு முன்பும்
யுத்த காலமும் 

இப் பள்­ளி­வா­சலைச் சுற்றி யுத்­த­கா­லத்­துக்கு முன்பும் யுத்த காலத்­திலும்  110 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்ந்து வந்­தன. இது கடற்­க­ரையை அண்­டிய பிர­தேசம் என்­பதால் பெரும்­பாலும் இப்­பி­ர­தேச வாசிகள் மீன்­பி­டித்­தொ­ழி­லையே தங்கள் ஜீவ­னோ­பாய தொழி­லாக மேற்­கொண்டு வந்­தனர்.

மீன் பிடிக்கச் செல்­ப­வர்­களும் இப் பள்­ளியை இறை­வ­ணக்­கத்­துக்­காகப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளனர்.

1985 ஆம் ஆண்டு யுத்தம் உக்­கி­ர­மான காலப்­ப­கு­தியில் அந்த பள்­ளி­வாசலை அண்­டி­யி­ருந்த சில குடி­யி­ருப்­ப­ாளர்கள் அப் பள்­ளி­வா­சலில் இருந்து 200 மீற்­ற­ருக்கு அப்பால் குடியேறி வாழ்ந்து வந்­தனர்.

கரும­லை­யூற்று தக்­கியா பள்­ளி­வாசல் உப தலைவர் முகம்­மது சுபைர் இங்கு கருத்து தெரி­விக்­கையில்,

பள்­ளி­வாசல் பதிவு

இப்­பள்­ளி­யா­னது சுமார் 400 வரு­டங்கள் பழமை வாய்ந்த ஆரம்ப பள்­ளி­யா­கவும் 1947 ஆம் ஆண்டு குறித்த பள்­ளி­வாசல் முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளத்­தினால் R/854/T47 ஆம் இலக்கத்தில் பதிவு செய்­யப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி 1966.03.27ம் திகதி குறித்த பள்­ளி­வா­ச­லுக்­காக பல ஏக்கர் வயல் காணி­களும் வக்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன.

மேலும் 1993.01.06 ஆம் திகதி நாட்டின் அப்­போ­தைய ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­வினால் திரு­மலை மாவட்­டத்தில் நடாத்­தப்­பட்ட நட­மாடும் சேவையில் இப்­பள்ளி நிர்­வா­கத்­திற்கு அழைப்­பிதழ் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது என்றும் குறிப்­பிட்டார்.

கிழக்கு விடு­விக்­கப்­பட்ட பின்பு

கிழக்கு மாகா­ணத்தில் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் 2007 ஆம் ஆண்டின் பிற்­ப­கு­தியில் இப் பிர­தேச மக்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அப்­போது கூட்­டு­ற­வுத்­துறை பிரதி அமைச்­ச­ரா­கவும் தற்­போ­தைய முத­ல­மைச்­ச­ரா­கவும்  இருக்­கின்ற  நஜீப் அப்துல் மஜீத் தேசிய மீலாத் விழா நிதியில் இருந்து ஒதுக்­கப்­பட்ட ஐந்து இலட்­சத்து எண்­ப­தா­யிரம் ரூபா செலவில் இப் பள்­ளி­வாசல் புன­ர­மைப்புச் செய்து அவரே வைப­வ­ரீ­தி­யாக பள்­ளி­வா­சலைத் திறந்து மக்­களின் பாவ­னைக்கு கைய­ளித்தார்.

உயர் பாது­காப்பு வலயம்

2008 ஆம் ஆண்டு உயர் பாது­காப்பு வலயம் என்ற பெயரில் அப் பிர­தே­சத்தை கைப்­பற்றி பள்­ளி­வா­ச­லுக்குள் எவரும் நுழை­யக்­கூ­டாது என படை­யி­னரால் உத்­த­ர­வி­டப்­பட்­டது. அன்­றி­லி­ருந்து முழு­மை­யாக இப்­பள்­ளி­வாசல் படை­யி­னரின் கட்­டுப்­பாட்டில் இருந்து வரு­கி­றது.

அமீர் அலியின் பிரே­ரணை

இந்தப் பள்­ளி­வா­சலை மீட்டு பிர­தேச மக்­களின் பாவ­னைக்கு விடு­மாறு குறித்த பள்­ளி­வாசல் பரி­பா­லன சபை­யினர் அர­சியல் வாதி­க­ளிடம் தொடர்ச்­சி­யாக கோரிக்கை விடுத்து வந்­தனர். இதன் பய­னாக இப் பள்­ளி­வா­சலை படை­யி­ன­ரிடம் இருந்து விடு­வித்து பொது மக்கள் பாவ­னைக்கு விடப்­பட வேண்டும் என 2012  நவம்பர் 6 ஆம் திகதி ஆளுங் கட்சி மாகாண சபை உறுப்­பி­ன­ரான அமீர் அலி கிழக்கு மாகாண சபையில் விஷேட தனி நபர் பிரே­ரணை ஒன்றைக் கொண்டு வந்தார். இந்தப் பிரே­ர­ணை­யா­னது ஆளுங் கட்சி எதிர்­கட்சி வேறு­பா­டின்றி தமிழ் முஸ்லிம் சிங்­களம் என்ற இன வேறு­பா­டின்றி ஏக­மா­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

மாவட்ட குழு கூட்­டத்தில்

இந்த நேரத்தில் 2014 ஜூன் 24 ஆம் திகதி நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திச் சபைக் கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகி­யோரால் இப் பள்­ளி­வாசல் பொது  மக்­களின் பாவ­னைக்கு விடப்­பட வேண்டும் என கூட்­டாக வேண்­டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை கருத்­திற்­கொண்ட  பொரு­ளா­தார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்­சி­நி­லமே தொழு­கை­க்கான ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­வித்தார்.

மக்களின் ஏக்கம்

யுத்தம் முடிந்து விட்­டது இனி நாட்டில் சமா­தானம் ஏற்­பட்­டு­விட்­டது எனவே அங்கு மீண்டும் நாங்கள் குடி­யேறி வாழலாம் என்ற பெரும் எதிர்­பார்ப்­போடு இருந்த இந்த மக்­க­ளுக்கு தொடர்ந்து ஏமாற்­றமே. இறு­தி­யாக பூர்­வீ­கக்­கு­டிகள் என்ற அந்­தஸ்த்தை கொடுத்­துக்­கொண்­டி­ருந்த அந்த பழம் பெரு­மை­வாய்ந்த பள்­ளி­வா­சலும் அடை­யாளம் காண முடி­யா­த­படி தரை மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்த காலத்தில் பள்­ளி­வா­சலில் தொழுது வந்த இவர்கள் சமா­தான காலத்தில் அங்கு செல்ல முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது. எனினும் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக கடலின் நடுவில் இருந்து நாளாந்தம் பள்­ளியைப் பார்த்து ஒரு­வாறு உள்­ளத்தை தேற்­றி­ய­வர்­க­ளாக கரைக்கு வந்த இவர்­க­ளுக்கு இன்று அதுவும் இல்­லாத சம்­பவம் சொல்­ல­லொனா துய­ரத்தில் அந்தக் கிரா­மத்தை ஆழ்­ததி விட்­டது

பள்­ளியை காண­வில்லை

இந்த விடயம் குறித்து அப் பிர­தேச மீன­வர்கள் கருத்துத் தெரி­விக்­கையில்,
இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட இப் பள்­ளி­வா­சலின் கூரை­யா­னது  சீனக்­குடா துறை­மு­கத்தை அண்­டிய கடலின் நடுவில் இருந்து பார்ப்­போர்­களின் கண்­க­ளுக்கு அழ­கா­கவும் முழு­மை­யா­கவும் தெரி­வ­துண்டு. ஆனால் 2014 ஆகஸ்ட் 17 ஆம் திகதி  காலையில் கட­லுக்கு மீன்­பி­டிக்கச் சென்ற நாங்கள் கடலில் இருந்து குறித்த பள்­ளி­வா­சலை பார்த்த போது அந்த பள்­ளி­வாசல் கண்­­க­ளுக்கு தென்­ப­டாமல் இருந்­த­தை­யிட்டு நாம் அதிர்ச்­சி­ய­டைந்தோம். கடலில் இருந்­த­வாறே, பள்­ளி­வாசல் அடை­யாளம் காண முடி­யாத அள­வுக்கு உடைக்­கப்பட்டி­ருப்­பதை ஊகித்துக் கொண்டோம். இதனால் கவ­லை­ய­டைந்த நாங்கள் மீன்­பி­டியை இடை நடுவில் விட்டு விட்டு உட­ன­டி­யாக கரையை நோக்கி வந்து ஏனைய மக்­க­ளிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­க­ப்பட்­டி­ருப்­பது அனைவருக்கும் தெரிய வந்­தது என்று உருக்­க­மாகத் தெரி­வித்­தனர்.

அர­சியல் வாதி­களின்
விரைந்த செயற்­பாடு

அன்­றைய தினம் மதியம் விடி­வெள்ளி யை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் மஹ்­ரூபின் புதல்­வரும் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான இம்ரான் மஹ்ரூப் குறித்த பள்­ளி­வாசல் தகர்க்கப்­பட்­டுள்­தா­கவும் இரா­ணு­வத்­தினர் குறித்த பகு­திக்குள் பிர­வே­சிக்க மக்­க­ளுக்கும் அர­சியல் தரப்­பி­ன­ருக்கும் மறுப்பு தெரிப்­ப­தா­கவும் கூறினார். அத்­தோடு பள்­ளி­வாசல் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டமை குறித்து தமது அதிருப்­தியை வெளி­யிட்­டி­ருந்தார். இந்­நி­லையில் முத­ல­மைச்சர் இவ்­வி­ட­யத்தை பெறுப்­பேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அமீர்­அலி தெரி­வித்­தி­ருந்தார்.

பள்­ளி­வாசல் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டதை அடுத்து  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ள­ுமன்ற உறுப்­பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்­கு­மா­காண சபை உறுப்­பினர் ஆர்.அம்.அன்வர் ஆகியோர் கடந்த திங்­கட்­கி­ழமை மாலை கரு­ம­லை­யூற்று பிர­தே­சத்­துக்குச் சென்று பிர­தே­ச­வா­சி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டனர். அப்­பி­ர­தேச பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளு­டனும் பொது­மக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்னர் கிழக்கு மாகாண இரா­ணுவ கட்­ட­ளை­யிடும் தள­பதி அவர்­க­ளுடன் இரு அர­சியல் பிர­மு­கர்­களும் தொலை­பேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்­பாக எடுத்­து­ரைக்­கப்­பட்­டதன் பின்னர் திரு­கோ­ண­மலை மாவட்ட கட்­ட­ளை­யிடும் அதி­கா­ரியை சம்­பவ இடத்­திற்கு அனுப்பி வைத்தார்.

இரா­ணு­வத்­தி­ன­ரு­ட­னான 
கலந்­து­ரை­யாடல்

அதற்­க­மை­வாக வருகை தந்த கேர்ணல் குசல குண­சேன தலை­மையில் கரி­ம­லை­யூற்று சுனாமி வீட்­டுத்­திட்ட பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் பா.உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்­பினர் ஆர்.எம். அன்வர், பிர­தேச அர­சியல் பிர­மு­கர்கள், பள்­ளி­வா­சல்­களின் நிர்­வா­கிகள் மற்றும் அப்­பி­ர­தேச பொது­மக்­களும் கலந்து கொண்­டனர்.

இங்கு பிர­தேச வாசிகள் பள்­ளி­வ­சலை நாங்கள் பார்க்க வேண்டும் என உள்ளே செல்ல முயற்­சித்­தனர். ஆனால் இது உயர் பாது­காப்பு வலயம் எவரும் உள்ளே நுழைய முடி­யாது என படை­யினர் தடுத்­து­விட்­டனர். இந்த கூட்­டத்தில்  கலந்து கொண்­டி­ருந்த, பிளான்டன் பொயின்ட்  இரா­ணுவத் தள­ப­தியும் இது உயர் பாது­காப்பு வலயம் நாங்­கள்­கூட உள்ளே செல்­வ­தென்றால் பாது­காப்பு அமைச்சின் அனு­மதி வேண்டும் எனக் கூறினார். இதனால் இந்தக் கூட்டம் எந்தப் பிர­யோ­ச­னமும் இன்றி முடி­வ­டைந்­தது.

பொலிஸில் முறைப்­பாடு

இத­னி­டையே, 2014 ஆகஸ்ட் 17 ஆம் திகதி இப் பள்­ளி­வா­சலின் நிர்­வா­கிகள் மற்றும் பிர­தே­ச­வா­சிகள் சிலர் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் உடைக்­கப்ட்­டி­ருப்­ப­தாக சீனக்­குடா பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

முத­ல­மைச்­ச­ருக்கு மட்டும் அனு­மதி

உடைக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை எவரும் பார்ப்­ப­தற்கு படை­யி­னரால் அனு­மதி மறுக்­கப்­பட்டு வந்த நேரத்தில், 2014 ஆகஸ்ட் 18 ஆம் திகதி அவற்றைச் சென்று பார்ப்­ப­தற்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரை மாத்­திரம் தனி­யாக அந்த இடத்­துக்கு படை­யினர் அழைத்துச் சென்­றனர். இதனை பார்­வை­யிட்டு வந்த முத­ல­மைச்சர் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை படை­யினர் புன­ர­மைப்புச் செய்து தர இணக்கம் தெரி­வி­த்துள்­ளனர் என பிர­தே­ச­வா­சி­களைச் சந்­தித்த போது தெரி­வித்தார்.

இதே­வேளை, கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் இரா­ணு­வத்­தினால் இடிக்­கப்­பட்­டுள்­ள­தாக உள்ளூர் முஸ்­லிம்கள் முன்­வைத்தக குற்­றச்­சாட்­டு­களை கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரிடம் இரா­ணுவம் மறுத்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­க­மொன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

மழையால் இடிந்து 
விழுந்த பள்­ளி­வாசல்

அந்த செய்தி குறிப்பில், பாழ­டைந்த நிலையில் காணப்­பட்ட பள்­ளி­வாசல் கட்­டடம் கடந்த சில நாட்­க­ளாக காற்­றுடன் கூடிய மழை கார­ண­மா­கவே இடிந்து விழுந்­துள்­ள­தாக இரா­ணு­வத்­தினால் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­ட­தாக முத­ல­மைச்சர் மேலும் தெரி­வித்­தி­ருந்தார்.

மழை­கா­ர­ண­மாக குறித்த பள்­ளி­வாசல் இடிந்­து­வி­ழு­வ­தற்­கான வாய்ப்பு இருந்­ததை தான் அவ­தா­னித்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தர்.

மாகா­ண ச­பையில் சூடு­பி­டித்த
பள்­ளி­வாசல் விவ­காரம்

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் இரா­ணு­வத்தால் இடிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்ள நிலையில், அங்கு பல­கட்சி உறுப்­பி­னர்கள் சென்று பார்­வை­யிட முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பள்­ளி­வாசல் இடிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண சபையில் கார­சா­ர­மான விவாதம் ஒன்று நேற்று முன்­தினம் நடை­பெற்­றது.

மாகாண சபை உறுப்­பினர் அன்­வரால் இது தொடர்­பான அவ­சர பிரே­ர­ணை­யொன்று சபையில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது.

இந்த விவா­தத்தின் போது, உறுப்­பி­னர்­களால் வைக்­கப்­பட்ட கோரிக்­கையை அடுத்து, பாது­காப்புத் தரப்பின் அனு­மதி பெற்று உண்மை நிலையை அறிய ஒரு வார காலத்திற்குள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்றை நேரில் அழைத்து செல்வதாக முதலமைச்சரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களில் பலரும், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பள்ளிவாசல் இராணுவத்தினாலே இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தும் வகையில் உரையாற்றினார்கள்.
இராணுவ அதிகாரியுடன் அந்த இடத்தை பார்வையிட சென்றிருந்த தன்னிடம் இயற்கை அனர்த்தம் காரணமாகவே அப்பள்ளிவாசல் இடிந்ததாக கூறப்பட்டது என, இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கூறினார். எனினும் முதலமைச்சரின் பதில் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

புனரமைப்புச் செய்வதென்பதும் அவ்வாறு கூறுவதும் இலகுவான விடயம். ஆனால் ஒரு சமூகத்தின் பூர்வீகத்தையும் வரலாற்றையும் எக் காலமும் சான்று பகர்கின்ற கட்டடக்கலை அம்சங்கள் பொருந்திய முன்னர் இருந்த பள்ளிவாசலை உருவாக்க முடியுமா? 400 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இவ்வாறான தடயங்கள் அழிக்கப்படுவது அச் சமூகத்தின் எதர்கால சந்ததியினரின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தக் கிராம வரலாற்றை  மட்டுமன்றி திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் பூர்வீகத்தையே இந்தப் பள்ளிவாசல் பாதுகாத்து வந்தது.
பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது முஸ்லிம் சமூகத்தின் உள்ளத்தில் ஆறாத புண்ணை ஏற்படுத்தியிருக்கிறது.சமாதானத்தின் பின்னர் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் கலாசார அடையாளங்களும் வணக்கஸ்தலங்களும் அழிக்கப்படுவதுதானா ஆச்சரியமிக்க நாடு?

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham