சர்வதேச மட்டத்தில் பெளத்த தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இவை தவறான கருத்துக்கள் என தெளிவுபடுத்தும் வகையில் நேற்று காலை பொதுபலசேனா அமைப்பினர் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் உயர்ஸ்தானிய குழுவினருடனான சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவ் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே உட்பட பெளத்த மதக்குழுவினர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இது தொடர்பில் பொதுபலசேனா பெளத்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவிக்கையில்;
பெளத்த மதம் தொடர்பிலான தவறான கோட்பாடொன்றினையும் பிழையான சித்தரிப்பினையும் சர்வதேச மட்டத்தில் பரப்பும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த அமைப்பினர்கள் அரசியல் தலைவர்கள் செய்யும் இவ்வாறான செயற்பாடுகளினாலேயே பெளத்த மதம் மீதான பிழையான கருத்துக்கள் வெளிப்படுகின்றன. அதேபோல் இலங்கையில் பொதுபலசேனா அமைப்பினரால் சிறுபான்மை மதத்தினர் மீதான தவறான அடக்கு முறைகளே மேற்கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் இனத்தவர் மீதான தாக்குதல்கள் இடம்பெறுகின்றது என்ற கருத்தும் பரப்பப்படுகின்றது.
இலங்கை சிங்கள நாடு. இங்கு பெளத்த சிங்களவர்களுக்கே முன்னுரிமை என்பதை நாம் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளோம். எனினும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் முஸ்லிம்களை அடக்க வேண்டும் முஸ்லிம்களை மதம் மாற வேண்டும் என எம்மால் வற்புறுத்தப்படவில்லை.
இலங்கையில் முஸ்லிம்கள் மீதான எந்தவொரு செயற்பாடுகள் இடம்பெற்றாலும் உடனடியாக பொதுபலசேனா பெளத்த அமைப்பின் மீது குற்றம் சுமத்துகின்றனர். இவை மிகவும் தவறானதொரு எண்ணப்பாடாகும். இலங்கையில் சகல மதத்தவர்களுக்கும் தமது உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெளத்த மதம் அழிவடைவதை அல்லது மதமாற்ற செயற்பாடுகளின் மூலம் ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதை நாம் விரும்பவில்லை.
எனவே இவ்விடயங்கள் தொடர்பில் சகல நாடுகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே சகல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் எமது சந்திப்பு தொடர்பில் அறிவித்தல் விடுத்திருந்தோம். அந்த வகையில் இன்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிக சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இக் கருத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment