-எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்
அந்த விடயம் தொடர்பில் பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ''என்ன நடக்கின்றது என்பதை அவதானிக்கவே ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு நாங்கள சென்றோம். உலகில் யார் கொலை செய்யப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்க விடயம். ஏன் இந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக மாத்திரம் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்? ஈராக்கில் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஏன் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? இந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களே எதிர்க்கிறார்களே'' எனக் கேள்வியெழுப்பினார்.
ஞானசார தேரரின் அந்தக் கருத்துக்கள் எனக்குள்ளும் சில கேள்விகளை ஏற்படுத்தியது. நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா இந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பு? இவர்கள் தமது கருத்துக்கள் செயற்பாடுகள் அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் கருத்தாகவும் இலங்கை முஸ்லிம்களின் ஆர்பாட்டமாகவுமே அடையாளப்படுத்துகின்றனர். இது எவ்வாறான எதிர்கால விளைவுகளை ஏற்படுத்தும்? இவர்களது செயற்பாடுகள் இலங்கை முஸ்லிம்களின் செயற்பாடாக காட்டப்படும் போது அவை எதிர்கால முஸ்லிம்களின் இருப்பில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும்?
ஒவ்வொரு முஸ்லிமும் சர்வதேச முஸ்லிம்களின் ஒரு அங்கம் என்ற வகையில் காஸா மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கினறது.
ஆனாலும் கூட எமக்கான பிரச்சினைகளின் போது முற்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகள் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகளைக் கையாளும் முறைகளை பின்பற்றி தூரநோக்கு சிந்தனைகளுடன் எமது ஒவ்வொரு கட்ட நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய சூழ் நிலையில் நீதிமன்ற உத்தரவைத் தாண்டி இவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்?,
ஞானசார தேரர் கூறியது போல உலகில் யார் கொலை செய்யப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்க விடயம் ஏன் இந்த தவ்ஹீத் ஜமாஅத் இஸ்ரேலுக்கு எதிராக மாத்திரம் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும்? ஈராக்கில் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஏன் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை?
அந்தக் கருத்திலும் ஒரு உண்மை நிலையை அவதானிக்க முடிகின்றது. உலகில் யார் தவறு செய்தாலும் அவற்றை சுட்டிக்காட்டும் மனோ நிலை இருக்க வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பிரதான உறுப்பினர்களில் ஒருவர் ஆற்றிய மிகவும் ஆக்ரோஷமான உரையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் இஸ்ரேலை ஊட்டி வளர்ப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் இருந்தால் 'போக்கோ ஹராம்' என்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய அமைப்பு பாடசாலை மாணவியரை கடத்திச் சென்ற போது இவர்கள் எங்கே சென்றார்கள்? 'இஸ்லாமிய ஸ்டேட்' என்ற குரலில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அங்கு வாழும் சிறுபான்மை சமூகத்தை மக்களை சுட்டுக் கொன்ற போது, வெளியேற்றியபோது ஏன் அதை எதிர்த்து இவர்கள் குரல் கொடுக்கவில்லை? இஸ்லாமிய பெயர் தாங்கியவர்கள் அநியாயம் இழைத்தால் அது நியாயம் ஆகிவிடுமா? எனவேதான் அதற்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.
காஸாவில் சுமார் ஒரு மாத காலமாக இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்தபோது வீதியில் இறங்காது கடந்த வாரம் வரை தவ்ஹீத் ஜமாஅத் காத்திருந்தமைக்கான காரணம் என்னவாக இருக்கும்?
இலங்கையில் இன்றை சூழ்நிலையில் இப்படியான ஒரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியதன் தேவை என்ன?
குறித்த தவ்ஹீத் அமைப்பு இவ்வாறு ஒரு ஆர்பாட்டத்தை நடத்தப் போவதாக ஊடகங்களிடம் அறிவித்ததை அடுத்து பொதுபலசேனா அமைப்பு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம் பெறுவதற்கு முன்தினம் பொலிஸார் பொதுபலசேன, சிஹல ராவய, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புகளால் கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்களில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களை தடுக்க பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டனர்.
அதனையும் தாண்டியே மாளிகாவத்தை பிரதேசத்தில் இந்த அமைப்பினர் ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அதே நேரம் சிங்கள கடும் போக்கு வாதிகளின் எரிந்து கொண்டிருக்கும் இனவாதத்துக்கு எண்ணெயூற்றி அவர்களை சீண்டி விடும் செயற்பாட்டையே இந்த அமைப்பு அன்றைய தினம் செய்தது.
ஆர்பாட்டத்தின் போது இவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் ஆற்றிய உரையில் ''ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மல சலம் கழித்தால் அதனை பொதுபலசேனா அமைப்பு கழுவுமா?, மாளிகாவத்தை காஸா என்றால் மயிரு புடுங்குவீங்க, ஒரு அளுத்கமையில் தப்பித்துவிட்டீர்கள'' போன்ற சொல்லாடல்கள்களும் நாகரிகமற்ற வார்த்தை பிரயோகங்களும் எதனை நோக்கி இவர்கள் மக்களை கூட்டிச் செல்ல தயாராகின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாகவுள்ளது.
குறித்த அமைப்பு தமது அமைப்பை மாத்திரம் முன்னிறுத்தி எதனைச் செய்தாலும் பரவாயில்லை. இவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் கருத்துக்களாக தமது கடும்போக்கு கருத்துக்களை சொல்லும் உரிமையை யார் கொடுத்தது?
இவர்கள் இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக தலைமைத்துவமா? அல்லது அரசியல் தலைமையா? இவர்கள் இலங்கை முஸ்லிம்களின் குரலாக தமது கருத்துக்களை எவ்வாறு சொல்லமுடியும்?
இந்த இனவாத செயற்பாடு தொடர்ந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என கோஷம் எழுப்பியவர்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி காஸாவுக்கு உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டமை தொடர்பில் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளமை எமக்குள் பல கேள்விளை மேலேழச் செய்கின்றன.
அந்தப் போஸ்டரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்றே ஜனாதிபதி ஒரு மில்லியன் டொலர்களை காஸாவுக்கு உதவியாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது நகைப்புக்கிடமான போஸ்டராகும். சமூக ஊடகங்களில் பலரும் இந்த போஸ்டர் விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொழும்பில் மாத்திரமன்றி கிழக்கில் கூட இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இவர்களது கோரிக்கையை ஏற்றுதான் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஆதாரம் காட்ட முடியுமா?
இந்த ஆர்பாட்டங்களின் போது குறித்த அமைப்பின் உறுப்பினர்களான பெண்களில் சிலர் காஸா என்ற வாசகங்களை முகங்களில் எழுதிய நிலையில் ஒலிபெருக்கிகளை தாங்கியவர்களாக கூக்குரல் இட்டதையும் அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பிலும் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அன்றைய தினம் அவ்விடத்து வந்த பொது பல சேனாவோ அல்லது வேறு முஸ்லிம் விரோத கடும்போக்கு சக்திகளோ வன்முறைகளைப் பிரயோகித்திருந்தால் அந்தப் பெண்களின் நிலை என்னவாகியிருக்கும்? ஏனைய இலங்கைவாழ் முஸ்லிம் பெண்களின் எதிர்கால இருப்பின் நிலை என்னவாக மாறியிருக்கும்?
வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை விடுத்து இலங்கையில் சிறுபான்மை சமூகமாக வாழும் முஸ்லிம்களின் இன்றைய நிலையையும் அண்மைக்கால சம்பவங்களையும் கவனத்தில் எடுத்து மிகவும் அவதானமான முறையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முஸ்லிம்கள் முன்னகர்த்த வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் சினிமாப் பாணியில் ஹீரோ வில்லனை பார்த்து கூக்குரல் இடுவது போல் செயற்பட முற்பட்டால் நிச்சயம் பின்விளைவுகளை முழு முஸ்லிம் சமூகமே எதிர் நோக்க வேண்டி ஏற்படும்.
முஸ்லிம் சமூகம் சிறுபான்மையாக ஒரு ஆட்சியின் கீழ் வாழும் போது அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக நமக்கு சொல்லித் தந்திருக்கின்றது.
இவற்றையெல்லாம் தாண்டி ஆக்ரோஷமாக கதைத்து வீர வசனங்கள் பேசுவது தூரநோக்குப்பார்வை கொண்ட ஒரு சமூகத்தின் செயற்பாடாக இருக்காது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அண்மைக் கால செயற்பாடுகள் பற்றி நோக்கும்போது எந்தளவுக்கு பொதுபல சேனா அமைப்பு சிலரால் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுகின்றதோ அதேபோல் இந்த அமைப்பும் ஏதேனுமொரு சக்திகளால் திட்டமிடப்பட்டே நகர்த்தப்படுகின்றதா எனும் கேள்வி எழுகிறது.
எந்த வகையன திட்டமிடலின் கீழ் இந்த அமைப்பு தமது செயற்பாடுகள் முன்னெடுத்தாலும் அவற்றின் செயற்பாடுகள் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தின் மீது பாரிய தாக்கங்களை செலுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.


Post a Comment