இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்குமிடையே போர் நிறுத்தத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கஸாவின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்று இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று (26) இலங்கை நேரப்படி நள்ளிரவு 11 : 00 மணியளவில் பலஸ்தீன் எங்கும் வெற்றிகொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
போர் நிறுத்த இணக்கத்தையடுத்து நேற்றுமுதல் சுமார் 50 நாட்களாக பலஸ்தீனின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வந்த வான் மற்றும் தரை வழித் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
எகிப்து கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்தே நிலையான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருதல், மீன் பிடித் தடையைத் தளர்த்துதல், எகிப்து-காஸா எல்லையைத் திறத்தல் உள்ளிட்ட விடயங்களிலேயே இவ்விணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் காஸாவை மீளக்கட்டியெழுப்புவதற்கும் போர் நிறுத்தம் வழிவகுத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலும் தாம் போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளதை உறுதி செய்துள்ளது.
நிலையான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காஸா மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 8 ஆம் திகதி முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிக மோசமான தாக்குதல்களில் மொத்தமாக 2138 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment