கருமலையூற்று பள்ளிவாசலை மாகாண சபை உறுப்பினர்கள் பார்வையிடச் செல்வதற்கான அனுமதியினை இராணுவத்தினரிடம் கோரியுள்ள போதிலும் அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்த பின்பு மாகாண சபை உறுப்பினர்களை அழைத்துச் செல்லவுள்ளேன் என கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் மீண்டும் குறித்த பள்ளிவாசலை தான் பார்வையிட செல்லவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது அவை உறுப்பினர்கள் உடைக்கப்பட்டதாக கூறப்படும் கருமலையூற்று பள்ளிவாசலை பார்வையிட செல்ல அனுமதி கோரியிருந்தனர். ஒரு வார காலத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொவதாக முதலமைச்சர் அதன் போது தெரிவித்தார் . இது தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே முதலமைச்சர் மேற்காண்டவாறு தெரிவித்தார்.
இவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட பள்ளிவாசலை இராணுவத்தினர் நிர்மாணித்து தருவதாக கூறியிருக்கின்றனர். இது முஸ்லிம்களின் வரலாற்று அடையாளமாகும். எனவே எமது பழமையான அடையாளங்களை பாதுகாக்க வேண்டும். அப்பள்ளிவாசலை அகற்ற அனுமதியளிக்க முடியாது.
நான் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாக செய்தி வெ ளியான பின்பு ஸ்தலத்துக்கு சென்று வந்தேன். அப்போது இராணுவத்தினர் இடிந்து விழுந்த பகுதிகளை துப்புரவு செய்திருந்தனர்.
கருமலையூற்று பள்ளிவாசல் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன். பாதுகாப்பு அமைச்சரிடமும் தெரிவித்திருக்கின்றேன். அவர் இராணுவத்தினர் பள்ளிவாசலை நிர்மாணித்து தருவர் என என்னிடம் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வாரம் மாகாண சபையில் பள்ளிவாசலை நேரில் சென்று பார்வையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த பள்ளிவாசல் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. எனவே மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க குறித்த பள்ளிவாசலை பார்வையிட செல்ல அவர்களின் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆகவே இது தொடர்பில் இராணுவத்தினரிடம் அனுமதி கோரியுள்ளேன். எனினும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் மாகாண சபை உறுப்பினர்களை அங்கு அழைத்து செல்லவுள்ளேன் என்றார்.

Post a Comment